பிரேசிலில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70-ஐ தாண்டியுள்ளது.
இதுகுறித்து பிரேசில் மீட்புப் படையினர் தரப்பில், “பிரேசிலில் கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக பல இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு சாலைகள் மோசமடைந்துள்ளன. ஆறுகளில் கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரையோரத்தில் இருந்த மக்கள் மீட்கப்பட்டுள்ளனர். சுமார் 4,000 வீடுகள் சேதமடைந்துள்ளன. வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி இதுவரை 79 பேர் இதுவரை பலியாகி உள்ளனர். காணமல் போனவர்கள் பற்றிய விவரம் இதுவரை தெரியவில்லை. அவர்களைத் தேடும் பணி நடந்து வருகிறது” என்றார்.
பிரேசிலில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கனமழையை எதிர்கொள்ளும் பொருட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பிரேசில் அரசு தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வெள்ளம் பாதித்த இடங்களை பார்வையிட்டார்.
பிரேசிலில் கடந்த மாத தொடக்கத்திலும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 14 பேர் உயிரிழந்தனர். 2021 ஆம் ஆண்டில் பிரேசிலில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி நூற்றுக்கணக்கானவர்கள் பலியாகினர். இந்த நிலையில் இந்த ஆண்டு தொடக்கத்திலே வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது.