புதுச்சேரி : காவிரி நீரை பயன்படுத்தி காரைக்கால் விவசாயிகள், குறுவை சாகுபடி செய்யலாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது.
வேளாண்துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;மேட்டூர் அணை கடந்த 24ல் திறக்கப்பட்டு, காவிரி நீர் பாசன மாவட்டங்களுக்கு கல்லணையில் இருந்து, நேற்று முன்தினம் 27 ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. காரைக்கால் மாவட்டத்தில் கடந்த ஐந்தாண்டுகளில் ஆழ்குழாய் பாசன வசதியுள்ள பகுதிகளில் மட்டும் ஆண்டுக்கு 700 ஹெக்டர் பரப்பளவில் குறுவை பயிர் சாகுபடி செய்யப்பட்டு வந்தது.
இந்தாண்டு காவிரியில் நீர் குறுவை சாகுபடிக்கு வரும் சூழல் இருப்பதால் 1500 ஹெக்டர் பரப்பளவில் குறுவை சாகுபடி இருக்கும் என திட்டமிடப்பட்டுள்ளது.காரைக்கால் மாவட்டத்தில் விதை நெல் விற்பனைக்கு 26, அரசு மற்றும் தனியார் முகவர்களுக்கும், உர விற்பனைக்கு 24, பூச்சி மருந்து விற்பனைக்கு 18 முகவர்களுக்கு விற்பனை உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
வேளாண் துறையால் தினமும் விதைகள், உரம், பூச்சி மருந்து இருப்பு கண்காணிக்கப்பட்டு தடையில்லாமல் விவசாய இடுபொருட்கள் விவசாயிகளுக்கு கிடைக்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.காரைக்கால் மாவட்டத்தில் குறுவை சாகுபடிக்காக இந்த மாதம் 11 மெட்ரிக் டன் அளவிற்கு சிஓ-51, ஏடிடி-43, ஏடிடி-45 நெல் ரக விதைகள் சான்று பெற்ற விதை முகவர்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
தற்போது 17.20 மெட்ரிக் டன் டிகேஎம்-9, ஏடிடி-43, ஏடிடி-45, சிஓ-51, ஏடிடி-53 நெல் ரக விதைகள் இருப்பில் உள்ளது. மேலும் தேவைப்படும் பட்சத்தில் போதுமான விதைகள் இருப்பு வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. உரங்களை பொறுத்தவரை 185 மெட்ரிக் டன் யூரியா, 62 மெட்ரிக் டன் டிஏபி, 63 மெட்ரிக் டன், காம்ப்ளக்ஸ் உரங்கள் இருப்பில் உள்ளன. தட்டுப்பாடின்றி உரங்கள் விவசாயிகளுக்க கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
2020-21ம் ஆண்டில் பயிர் காப்பீடு செய்ததற்கு, இழப்பீடு தொகையை விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு நிறுவனம் விரைந்து வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.காரைக்கால் மாவட்ட விவசாயிகள் காவிரியில் வரும் நீரைக்கொண்டு குறுவை சாகுபடி செய்வதற்கான வாய்ப்புள்ள நிலையில் குறுவை நெல் சாகுபடி செய்யலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Advertisement