புதுக்கோட்டையில் தனது தாய் வீட்டுக்கு மின் இணைப்பு வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பெண்மணி ஒருவர் புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்திற்கு மண்டியிட்டு சென்று நூதன முறையில் ஆட்சியரிடம் மனு அளித்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே ஒடுகம்பட்டி கிராமத்தில் பள்ளிவாசல் தெற்கு தெரு பகுதியில் 40 ஆண்டுகளுக்கு மேலாக செல்லம்மாள் என்ற பெண்மணி வசித்து வருகிறார். செல்லம்மாள் வசிக்கும் பள்ளிவாசல் தெற்கு தெருவில் சுமார் 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ள நிலையில், அனைவருக்கும் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும், செல்லம்மாள் வீட்டிற்கு மட்டும் மின் இணைப்பு வழங்க அப்பகுதி கவுன்சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் செல்லம்மாள் வீட்டிற்கு மட்டும் மின் இணைப்பு வழங்கவில்லை என்றும், தனது தாய் மின்வசதி இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வருவதாகவும், செல்லம்மாளின் மகள் வெள்ளையம்மாள் குற்றம்சாட்டுகிறார்.
மேலும் மின் இணைப்பு வழங்கக்கோரி பலமுறை மின்வாரிய அலுவலகத்தில் மனு கொடுத்தும் எந்த பலனும் இல்லை என்றும் கூறும் வெள்ளையம்மாள், இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று தனது தாயாரின் வீட்டிற்கு மின்இணைப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, மண்டியிட்டு நூதன முறையில் தனது கோரிக்கை மனுவைக் ஏந்திச் சென்றார். இதனையடுத்து காவல்துறையினர் வெள்ளையம்மாளை உடனடியாக மாவட்ட ஆட்சியரிடம் அழைத்துச் சென்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM