‘குக்கு வித் கோமாளி’ நிகழ்ச்சியில் நடுவர்களில் ஒருவராக வரும் வெங்கடேஷ் பட் பேசிய ஒரு வீடியோதான் சமீபத்திய வைரல். அவர் நிகழ்ச்சியின் போட்டியாளர்களிடம், “நம்ம நிகழ்ச்சி மூலமா மன அழுத்தத்திலிருந்து பலர் மீண்டு இருக்கின்றனர். குழந்தைப் பேற்றிற்காகச் சிகிச்சை மேற்கொண்டு வரும் பெண் ஒருவர் நம் நிகழ்ச்சியைப் பார்த்து கர்ப்பம் அடைந்திருக்கிறார். மேலும், மருத்துவமனையில் தன்னைப் போல் குழந்தைக்காக ஏங்கி நின்ற தாயிடம் இந்த நிகழ்ச்சியைப் பார்க்கச் சொல்லி வலியுறுத்தியதாகவும் எனக்கு மெசேஜ் அனுப்பி மகிழ்ந்து இருக்கிறார்” என அவர் பகிர்ந்து கொண்டார்.
இந்தக் காணொலி சமூக வலைதள பக்கங்களில் வைரலானது. சிலர் அதனைக் கிண்டல் செய்தும், சிலர் அதனை ஆதரித்தும் பதிவிட்டு வந்தனர்.
தற்போது இந்த கேலி, கிண்டல், டிரால்கள் குறித்து வெங்கடேஷ் பட், தனது ஃபேஸ்புக் பக்கத்தில் மனம் திறந்திருக்கிறார். தனக்கு ஆதரவாக வந்த ஒரு மீம்மைப் பகிர்ந்து,
“ரெண்டு நாளா மிகவும் வருத்தத்தில் இருக்கிறேன். என்னைக் கேலி செய்ததற்காக இல்லை. மனிதம் செத்துவிட்டது என்பதற்காக! எது வேண்டுமானாலும் சாகலாம் மனிதம் சாகாது. கடவுள் இருக்காருடா குமாரு… சந்திரமுகி படம் மாதிரி ரெண்டு நாளா அண்ணனுங்க ஆட்டம் இருந்துச்சு. நல்லவர்கள் இன்னும் இவ்வுலகில் உள்ளார்கள். கீழே நான் பதிவிட்டிருக்கும் இந்தப் புகைப்படம் நேஷனல் லெவலில் டிரெண்ட் ஆகியுள்ளது. நல்ல உள்ளங்களுக்கு நன்றி!
குழந்தைச் செல்வம் உள்ளவர்களுக்கே அது எவ்வளவு பெரிய பாக்கியம் என்பது தெரியும். அப்படியென்றால் இல்லாதவர்களை யோசித்துப் பாருங்கள். மீம் கிரியேட்டர்ஸ் எனக்காக அல்ல, உயிரைச் சுமக்கும் பெண்ணுக்காகக் கேட்கிறேன். தயவுசெய்து என்னைக் கிண்டல் செய்வதாக எண்ணி உங்களைத் தரம் தாழ்த்திக் கொள்ளாதீர்கள்! எனக்கும் மணமுடித்து ஏழு ஆண்டுகள் கழித்துக் கிடைத்த செல்வம் என் குழந்தை! ஒவ்வொரு நொடியும் ஒரு யுகம் ஆனதை நான் உணர்ந்தவன்” என உருக்கமாகப் பதிவிட்டிருக்கிறார். மேலும் இந்தப் பதிவின் ஹேஷ்டேக்கில் ‘மனிதம் எங்கே’ எனவும் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த விவகாரம் குறித்துப் பேச, வெங்கடேஷ் பட்டைத் தொடர்பு கொண்டோம். ஆனால், அவர் தற்போதைய சூழலில் இது குறித்துப் பேச மறுத்துவிட்டார்.