கோவை அருகே ஊர் எல்லை சாமி சிலையை சேதம் செய்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கோயமுத்தூர் மாவட்டம், போத்தனூர் அடுத்த நஞ்சுண்டாபுரத்தில் சுமார் 60 ஆண்டு கால பழமையான கருப்பராயன் முனியப்பன் எல்லை கோவில் உள்ளது.
நேற்று மாலை இந்தக் கோவிலின் பூசாரி வழக்கம்போல் சாமிக்கு பூஜை செய்துவிட்டு, கோவிலை பூட்டிவிட்டு சென்றுள்ளார்.
இன்று காலை கோவிலை திறந்தபோது, கருப்பராயன் முனியப்பன் சாமியின் சுயம்பு சிலை உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
மேலும் சிங்கம் சிலையும், முனியப்பன் சிலையில் இருந்த வாளும் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு ஊர் மக்களிடம் தகவல் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து ஏராளமான பொதுமக்கள் கோவில் முன்பு திரண்டனர். சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார் கோவத்தில் இருந்த பொதுமக்களிடம் சமாதானம் பேசினர். மேலும், சிலையை உடைத்த மர்ம நபர்கள் விரைவாக பிடிபடுவார்கள் என்று பொதுமக்களுக்கு உறுதி அளித்தனர்.
கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் யார்? சிலையை உடைக்க காரணம் என்ன? என்பது குறித்து போத்தனூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.