உணவுப் பாதுகாப்புக்காக விரிவான அரச-தனியார் கூட்டு வேலைத்திட்டத்தை உடனடியாக ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
உரத் தேவையைப் பூர்த்தி செய்ய பல நாடுகளுடன் நடத்திய பேச்சுவார்த்தை வெற்றியடைந்துள்ளது. எனவே உரத் தட்டுப்பாடு அல்லது வேறு எக்காரணம் கொண்டும் சிறுபோகத்தில் பயிர்ச் செய்கையை கைவிட வேண்டாம் என அனைத்து விவசாயிகளிடமும் ஜனாதிபதி அவர்கள் வேண்டுகோள் விடுத்தார்.
இன்று (30) கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற சிறுபோக பயிர்ச்செய்கை நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய உணவுப் பற்றாக்குறையைக் குறைத்தல் தொடர்பான கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்தார்.
- தேசிய உரக் கொள்கையை விரைவாக உருவாக்குவதற்கான நடவடிக்கைகள்…
- பயிரிடப்படாத அரச நிலங்கள் இளம் விவசாயிகளுக்கு…
- அனைத்து மாகாணங்களுக்கும் கூட்டாக பயிர்ச் செய்கை ஊக்குவிப்பு வாரம்…
- சோளம் உள்ளிட்ட அத்தியாவசிய பயிர்கள் பயிர்ச் செய்கைக்காக கந்தகாடு விவசாய நிலம் …
- விவசாயம், கால்நடைகள் மற்றும் நன்னீர் கைத்தொழில்களுக்கு முன்னுரிமை…
- உரத் தேவைக்கு போஸ்பேட் வைப்பு உகந்ததாகப் பயன்படுத்தப்படும்…
உர இறக்குமதி, விநியோகம், முறையான முகாமைத்துவம், விழிப்புணர்வு, விவசாயிகள் மற்றும் அதிகாரிகளுக்கிடையில் ஒருங்கிணைப்பு என்பனவற்றிற்காக தேசிய உரக் கொள்கையொன்று உடனடியாக வகுக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார். விவசாயிகளின் விருப்பத்திற்கு ஏற்ப இரசாயன அல்லது சேதனப் பசளையைப் பயன்படுத்தி பயிர்ச்செய்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு விவசாய அமைச்சின் பூரண ஒத்துழைப்பு வழங்கப்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
சிறுபோகத்தில் பயிர்ச்செய்கைக்குப் பயன்படுத்தப்படாத வயல் நிலங்களைக் கண்டறிந்து, பயறு, கௌபி, சோயா உள்ளிட்ட அத்தியாவசியப் பயிர்களைப் பயிரிட ஊக்குவிப்பதன் மூலம், விவசாயிகள் அதிக வருமானம் பெறுவதற்கான வாய்ப்பை வழங்க முடியும். சோளம், சோயா மற்றும் ஏனைய பயிர்களை பயிரிடுவதற்காக தேசிய கால்நடை வளங்கள் அபிவிருத்திச் சபைக்கு சொந்தமான கந்தகாடு விவசாய நிலத்தை விரைவாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அவர்கள் பணிப்புரை விடுத்தார்.
பயிரிடப்படாத நிலங்களில் பெரும் பகுதி அரசுக்குச் சொந்தமானது. அந்த நிலங்களை கண்டறிந்து இளம் விவசாயிகளுக்கு வழங்குவதற்கு முடிவு செய்யப்பட்டது.
வீட்டுத்தோட்டம் மற்றும் அரச அலுவலக நிலங்களில் பயிரிடுவதை ஊக்குவிக்க வேண்டும். அதற்கு அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏனைய அரசியல் தலைவர்கள் முதல் அனைத்து அரச ஊழியர்களும் பங்களிப்புச் செய்து முன்னுதாரணமாகத் திகழ வேண்டுமென அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
பயிரிடப்பட வேண்டிய பயிர்களை இனங்கண்டு, அனைத்து மாகாண ஒருங்கிணைந்த பயிர்ச்செய்கை ஊக்குவிப்பு வாரம் ஒன்றை ஆரம்பிப்பதற்கும் விவசாயம், கால்நடை வளங்கள் மற்றும் நன்னீர் மீன்பிடிக் கைத்தொழில்களுக்கு மாகாண சபைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியை குறைபாடின்றி வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.
உரத் தேவையை இலக்காகக்கொண்டு எதிர்வரும் பெரும் போகத்திற்கு பொஸ்பரஸ் அடங்கிய உரங்களை உற்பத்தி செய்வதற்கு எப்பாவல பொஸ்பேட் வைப்புகளை உகந்த முறையில் பயன்படுத்துமாறு ஜனாதிபதி அவர்கள் பணிப்புரை விடுத்தார்.
பால், முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலையை கட்டுப்படுத்த கால்நடை தீவனம் வழங்குவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
அறுவடைக்குப் பிந்திய சேதத்தைக் குறைத்தல், உணவைச் சிக்கனப்படுத்தல், உணவைச் சேமித்து வைத்தல், உணவைப் பதப்படுத்தல் மற்றும் விவசாய உற்பத்திகளின் பெறுமதியை உயர்த்தல், மாற்று உணவு வகைகளை அறிமுகப்படுத்தல் மற்றும் பிரபல்யப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோன்று, பயிர்களில் ஏற்படும் நோய்கள் மற்றும் பயிர்களைப் பாதிக்கும் களைகள், பூச்சி சேதங்களை தடுப்பதற்கு பொறிமுறையொன்றை அறிமுகப்படுத்தல் மற்றும் விவசாய உற்பத்தி சார்ந்த சுயதொழில் ஊக்குவிப்பு உள்ளிட்ட பல்வேறு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சின் செயலாளர் திரு.எம்.பி.ஆர். புஷ்பகுமார தெரிவித்தார்.
ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி அநுர திஸாநாயக்க மற்றும் விவசாய அமைச்சிக்குரிய துறைசார் நிறுவனங்களின் தலைவர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
30.05.2022