வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஐதராபாத்: இரு இந்தியர்கள் உட்பட 21 புதிய கார்டினல்களை போப் பிரான்சிஸ் அறிவித்துள்ளார். இரு இந்தியர்களில் ஒருவரான அந்தோணி பூலா என்பவர் இந்தியாவின் முதல் பட்டியலின கார்டினல் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
அடுத்த போப் யார் என்பதை தேர்வு செய்பவர்கள் தலைமை பாதிரியார்கள் (கார்டினல்கள்). கத்தோலிக சர்ச்களில் ஊழியம் செய்பவர்களிலிருந்து, கார்டினல்களை போப் தேர்வு செய்வார். இந்நிலையில், உலகம் முழுவதும் புதிதாக 21 புதிய கார்டினல்களை போப் பிரான்சிஸ் அறிவித்துள்ளார். இதில் ஐதராபாத்தை சேர்ந்த தலைமை பேராயர் அந்தோனி பூலா மற்றும் கோவாவைச் சேர்ந்த தலைமை பேராயர் பிலிப்பே நெரி பிரோரோ இருவரும் இந்தியர்கள். புதிதாக தேர்வான 21 பேரில் 6 பேர் ஆசியாவையும், 8 பேர் ஐரோப்பியாவையும், 4 பேர் மத்திய மற்றும் லத்தீன் அமெரிக்காவையும், 2 பேர் ஆப்பிரிக்காவையும், ஒருவர் வட அமெரிக்காவையும் சேர்ந்தவர்கள்.
இந்நிலையில், இந்தியாவிலிருந்து கார்டினலாக தேர்வாகியுள்ள அந்தோணி பூலா(60), இந்தியாவின் முதல் பட்டியலின கார்டினல் என்ற பெருமையை பெற்றுள்ளார். 1992ல் பாதிரியாராக நியமிக்கப்பட்ட அவர், 2008ல் கர்னூல் பேராயராக நியமிக்கப்பட்டார். பின் 2020ம் ஆண்டு முதல் ஐதராபாத் தலைமை பேராயராக உள்ளார். புதிய கார்டினல்கள் பதவியேற்பு விழா, போப் பிரான்சிஸ் தலைமையில், வரும் ஆக., 27ம் தேதி நடைபெற உள்ளது.
Advertisement