மும்பையில் தாயை திருமணம் செய்ய தடையாக இருந்த மகனை அடித்துக் கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2014 ஆம் ஆண்டு கணவனை இழந்த நிலையில் 8 வயது மகள் மற்றும் 4 வயது மகனுடன் வாழ்ந்து வந்த பெண்ணை தொந்தரவு செய்தார் 35 வயதான தாஹேர் பதான். அந்த பெண்ணை காதலிப்பதாகக்கூறி அடிக்கடி அவரை சந்தித்து திருமணம் செய்து கொள்ள வலியுறுத்தியுள்ளார். பதான் அடிக்கடி குடித்துவிட்டு அந்த பெண்ணின் வீட்டிற்கு வந்து வலுக்கட்டாயமாக அவரது குடும்பத்துடன் வாழத் தொடங்கினார்.
இவர்களது திருமணத்திற்கு 4 வயது சிறுவன் அயன் கான் தடையாக இருப்பதாக நம்பி அந்த சிறுவனை அடித்துள்ளார் பதான். திருமணம் செய்யாவிட்டால் சிறுவனை கொலை செய்து விடுவதாக அடிக்கடி மிரட்டி வந்துள்ளார் பதான். ஜனவரி 15, 2015 அன்று, பதான் அடித்ததில் தம்பியின் தலை சுவரில் மோதியதில் ரத்தம் கொட்டுகிறது என்று மகள் தனது தாயின் பணியிடத்திற்கு சென்று அழுதபடி கூறியுள்ளார்.
சிறுவன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விசாரணையின்போது, குற்றம்சாட்டப்பட்ட பதான் அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்தார். சிறுவன் வீட்டிற்குள் ஏணியில் இருந்து விழுந்துவிட்டதாக கூறினார் பதான். பிரேத பரிசோதனையில், சிறுவன் மரணத்திற்கு காரணம், தலையில் காயம் மற்றும் உள் ரத்தப்போக்கு காரணம் என்று கூறப்பட்டது.
சிறுவனுக்கு விலா எலும்பு முறிவு ஏற்பட்டு உள் உறுப்புகள் சிதைந்து போயிருந்ததும் பிரேத பரிசோதனையில் தெரிய வந்தது. பிரேதப் பரிசோதனை அறிக்கையைத் தவிர, அந்தப் பெண், அவரது மகள் மற்றும் மற்றவர்களின் வாக்குமூலங்கள் ஒன்றுக்கொன்று ஒத்துப்போனதை அடுத்து பதானை குற்றவாளி என்று நீதிமன்றம் அறிவித்தது.
குற்றம்சாட்டப்பட்ட பதான், தான் இளமையாக இருப்பதாகவும், திருமணமாகாதவர் என்றும் கூறி, மன்னிப்புக் கோரினார். ஆனால் அதை ஏற்க மறுத்த நீதிபதி பதானுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM