டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணி – தஞ்சையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்

தஞ்சாவூர்:
தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை , புதுக்கோட்டை, அரியலூர், கடலூர் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆண்டுதோறும் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும். இந்த ஆண்டு காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த கனமழையால் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது.
தற்போது காவிரி டெல்டா மாவட்டங்களில் ரூ.80 கோடி மதிப்பில் ஆறுகள், வடிகால்கள், வாய்க்கால்கள் தூர்வாரும் பணி நடந்து வருகிறது. இந்தப் பணிகள் அனைத்தும் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளன. 
இந்தத் தூர்வாரும் பணிகளை பார்வையிடுவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னையில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வந்தார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு திருச்சி விருந்தினர் மாளிகையில் மதிய உணவை முடித்து சிறிது நேரம் ஓய்வெடுத்தார். 
இந்நிலையில், தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை அருகே உள்ள கொக்கேரி கிராமத்தில்  ரூ.14 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் நடந்து வரும் பிமனோடி வாய்க்கால் தூர்வாரும் பணியை ஆய்வு செய்தார். அப்போது அதிகாரிகளிடம் பணிகள் முடிந்துள்ள விவரங்களை கேட்டறிந்தார்.
இந்த ஆய்வை முடித்துக் கொண்டு அவர் நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு புறப்பட்டுச் சென்றார். நாளை காலை 2-ம் நாளாக ஆய்வுப் பணியை தொடர்கிறார். 
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி தஞ்சை மாவட்டத்தில் பாதுகாப்புப் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.