தருமபுரி அருகில் உள்ள செட்டிக்கரை பகுதியில் சட்டவிரோதமாகக் கருக்கலைப்பு செய்யப்படுவதாக, அந்த மாவட்ட மருத்துவத்துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இந்தத் தகவலையடுத்து அந்தப் பகுதி காவல்துறையினர் உதவியுடன், மருத்துவத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், அந்தப் பகுதியில் சிலர் சட்டவிரோதமாகக் கருக்கலைப்பு செய்துவருவது தெரியவந்தது.
விசாரணையைத் தீவிரப்படுத்தியதில் அந்தப் பகுதியில் ஸ்கேன் இயந்திரம் வைத்திருந்த சதீஷ்குமார், சுதாகர், செவிலியர் கற்பகம், இடைத்தரகர் ஜோதி, குமார், ஆட்டோ ஓட்டுநர் வெங்கடேசன் உட்பட ஏழு பேரை காவல்துறையினர் கைதுசெய்தனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சட்டவிரோதமாகக் கருவின் பாலினத்தைக் கண்டறிந்து அவற்றைக் கருக்கலைப்பு செய்துவந்தது தெரியவந்தது.
இந்த சட்டவிரோத செயலில் தொடர்புடைய இன்னும் சிலரையும் காவல்துறையினர் தேடிவந்தனர். அவர்களில் செவிலியர் கற்பகத்தின் கணவர் விஜயகுமார் இன்று கைதுசெய்யப்பட்டார். போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.