அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஊழலுக்கு எதிராகக் களம் காணும் எனத் தேர்தல் வாக்குறுதி அளித்துதான் டெல்லியில் ஆட்சியைக் கைப்பற்றியது. அதைத் தொடர்ந்து அதே வாக்குறுதியை வழங்கி பஞ்சாப்பிலும் கடந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றது. இந்த நிலையில், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் சமீபத்தில் அந்த மாநிலத்தின் சுகாதார அமைச்சர் விஜய் சிங்லா ஊழலில் ஈடுபட்டுவருவதாகத் தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்ததையடுத்து, அவரை உடனடியாகப் பதவிநீக்கம் செய்தார். பின்னர் அவரை காவல்துறையினர் கைதுசெய்தனர்.
பஞ்சாபில் அமைச்சர் ஒருவர் ஊழல் குற்றச்சாட்டில் கைதாகியிருக்கும் நிலையில், தற்போது ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெறும் டெல்லியிலும் அமைச்சர் ஒருவர் ஊழல் புகாரில் கைது செய்யப்பட்டிருக்கிறார். ஆம் ஆத்மி தலைமையிலான டெல்லி அரசில் சுகாதாரம், உள்துறை, மின்சாரம் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சராக உள்ள சத்யேந்தர் ஜெயின் கொல்கத்தாவைச் சேர்ந்த நிறுவனத்துடன் தொடர்புடைய ஹவாலா பரிவர்த்தனைகளில் ஈடுபட்டதாக அமலாக்க இயக்குநரகத்துக்கு புகார்கள் குவிந்தன. அதையடுத்து அமலாக்கப் பிரிவு அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டு அவர் மீதான குற்றச்சாட்டை உறுதிசெய்தனர்.
கடந்த ஏப்ரல் மாதம் பணமோசடி விசாரணை தொடர்பாக டெல்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் குடும்பம் மற்றும் அவரது நிறுவனங்களின் 4.81 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது. இந்த நிலையில் தற்போது அவர் இந்த ஊழல் குற்றச்சாட்டுத் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.