நாடளாவிய ரீதியில் கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற அமைதியின்மை தொடர்பில் 12 பாராளுமன்ற உறுப்பினர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
பொலிஸ் நிலையங்கள், புலனாய்வு பிரிவுகள் மற்றும் குற்ற புலனாய்வு பிரிவினரின் கூட்டு முயற்சியின் மூலம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கடந்த மே மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 2 ஆயிரத்து 72 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 854 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதுடன் ,கடந்த 24 மணிநேரத்தில் 24 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.