திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே உள்ள செருகளத்தூர் மாதா கோயில் தெருவில் வசித்துவருபவர் பாஸ்கர். 55 வயதான இவர் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் சுமைதூக்கும் தொழிலாளராக வேலைப் பார்த்து வருகிறார். இதே ஊரில் பாஸ்கரின் சகோதரர் ஆரோக்கியதாஸ் என்பவரும் வசித்து வருகிறார். இந்நிலையில் பாஸ்கருக்கும், ஆரோக்கியதாஸூக்கும் இடையே கடந்த பல ஆண்டுகளாகச் சொத்து தகராறு இருந்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. இதனால் இரு குடும்பத்தினர் இடையே அடிக்கடி மோதல் போக்கு நிலவி வந்திருக்கிறது.
இந்த நிலையில்தான், அந்தப் பகுதியில் நடந்த விழா ஒன்றில் ஆரோக்கியதாஸின் மகன்கள் அன்பழகன்-ஸ்டீபன் மற்றும் பாஸ்கரின் மனைவி அலங்காரமேரி, அவர் மகன் அஜய் ஆகியோர் கலந்து கொண்டிருக்கிறார்கள். ஒரே இடத்தில் இரு குடும்பத்தினரும் நேருக்கு நேர் சந்தித்துக்கொண்ட நிலையில், இவர்களுக்கு இடையே வாய்த்தகராறு முற்றிருக்கிறது. இது எல்லை மீறிய நிலையில், ஆத்திரமடைந்த ஸ்டீபன், அஜய்யை கத்தியால் கொடூரமாகக் குத்தியதாகக் கூறப்படுகிறது.
வலியால் துடித்துக் கூச்சலிட்ட அஜய், ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதைக் கண்டு பதறிப்போன அஜய்யின் தாய் அலங்காரமேரி, அஜய் அருகில் வந்திருக்கிறார். அப்போது அலங்காரமேரியை, ஸ்டீபனின் சகோதரர் அன்பழகன் கத்தியால் குத்தியதாகச் சொல்லப்படுகிறது. இதில் அலங்காரமேரியும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார். அதையடுத்து, ஸ்டீபன், அன்பழகன் ஆகிய இருவரும் அங்கிருந்து தப்பித் தலைமறைவாகி விட்டனர்.
இது குறித்துத் தகவலறிந்து, நன்னிலம் நகர காவல்துறை துணை கண்காணிப்பாளர் இளங்கோவன், குடவாசல் காவல்நிலைய ஆய்வாளர் கருணாநிதி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். கொலைசெய்யப்பட்ட அஜய், அவர் தாய் அலங்காரமேரி ஆகிய இருவரின் உடல்களையும் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து குடவாசல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அன்பழகன், அவர் சகோதரர் ஸ்டீபன் ஆகிய இருவரையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.