மேற்கு வங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜூன் சிங் பா.ஜ.க-விலிருந்து மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தார். இதைத் தொடர்ந்து அவருக்கு மேற்கு வங்கத்தின் பாரக்பூரில் வரவேற்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த விழாவில் கலந்துகொண்ட திரிணாமுல் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் அபிஷேக் பானர்ஜி, “பா.ஜ.க-விலிருந்து எங்களுடன் சேர வரிசையில் நிற்கிறார்கள். அவர்களின் பட்டியல் வேண்டுமா? யாரெல்லாம் திரிணாமுல் காங்கிரஸை மேற்கு வங்கத்தைவிட்டு வெளியேற்ற நினைத்தார்களோ அவர்கள் தற்போது வங்காளத்தைவிட்டு வெளியேறிவிட்டனர்.
பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் பா.ஜ.க-விலிருந்து மாற விரும்புகிறார்கள். திரிணாமுல் காங்கிரஸ் கிரீன் சிக்னல் கொடுக்கும் நாளில், பா.ஜ.க-விலிருந்து ஏராளமான எம்.பி-க்கள் திரிணாமுல் காங்கிரஸில் சேருவார்கள். மேலும், சிட்பண்ட் மோசடியாளர் சுதீப்தா சென்னுடன் மேடையைப் பகிர்ந்து கொண்டதற்காக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மதன் மித்ராவை கைதுசெய்ய முடியுமானால், நீரவ மோடியுடன் மேடையிலிருந்ததற்காக பிரதமரை ஏன் கைதுசெய்யவில்லை” என்று பேசினார்.