புதுடில்லி: சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. மொத்தம் 685 பேர் தேர்வான நிலையில், முதல் மூன்று இடங்களை பெண்கள் பிடித்துள்ளனர்.ஐ.ஏ.எஸ்., – ஐ.பி.எஸ்., உள்ளிட்ட குடிமை பணிகளுக்கான சிவில் சர்வீஸ் தேர்வுகளை யு.பி.எஸ்.சி., எனப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது.
இவை, முதல்நிலை தேர்வு, பிரதான தேர்வு மற்றும் நேர்முக தேர்வு என மூன்று கட்டங்களாக நடத்தப்படுகின்றன.கடந்த 2021ம் ஆண்டுக்கான பிரதான தேர்வு ஜனவரியில் நடந்து முடிந்தது. ஏப்., – மே மாதங்களில் நேர்முக தேர்வுகள் நடந்தன. இந்நிலையில், முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில், பொதுப் பிரிவில் 244, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் 73, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 203, எஸ்.சி., 105, எஸ்.டி., 60 பேர் என, மொத்தம், 685 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர்.
ஸ்ருதி ஷர்மா, அங்கிதா அகர்வால், காமினி சிங்லா என்ற மூன்று பெண்கள் முதல் மூன்று இடங்களை பிடித்து உள்ளனர்.யு.பி.எஸ்.சி.,யின் www.upsc.gov.in என்ற இணையதளத்தில் முடிவுகள் நேற்று வெளியாகின. இன்றிலிருந்து 15 நாட்களுக்குள் மதிப்பெண்கள் வெளியிடப்பட உள்ளன.
Advertisement