சிம்லா: பிரதமர் மோடியின் இரண்டாவது ஆட்சிகாலத்தின் 3வது ஆண்டு இன்றுடன் நிறைவுற்ற நிலையில், நாளை சிம்லாவில் பாஜகவின் சிறப்பு மாநாடு நடக்கிறது. குஜராத் முதல்வராக இருந்த மோடியின் தலைமையில் கடந்த 2014ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலை பாஜக எதிர்கொண்டது. பெரும்பான்மை பலத்துடன் பாஜக வெற்றி பெற்றது. பிரதமராக மோடி பதவியேற்றார். அதற்கடுத்து 2019ல் நடந்த தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக கூட்டணி, 353 இடங்களை கைப்பற்றியது. பாஜக மட்டும் 303 இடங்களை வென்றது. கடந்த 2019ம் ஆண்டு மே 30ம் தேதி மோடி, மீண்டும் இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்றார். இந்நிலையில் மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்று இன்றுடன் 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இன்று முதல் அடுத்த 15 நாட்களுக்கு மக்கள் தொடர்பு பிரசாரத்தை பாஜக முன்னெடுத்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் தொடர்ந்து இரண்டாவது முறையாக பாஜக ஆட்சி நடைபெறும் நிலையில், இன்றைய தினம் வரை 8 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. மோடி அரசின் செயல்பாடுகளை சாமானிய மக்களிடம் கொண்டு செல்லும் வகையில், சிம்லாவில் உள்ள ரிட்ஜ் மைதானத்தில் நாளை சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி, அங்கு நடக்கும் பேரணியில் பங்கேற்கிறார். இங்கு விழா நடத்துவதற்கான முக்கிய காரணம், இம்மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து இமாச்சலப் பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் கூறுகையில், ‘பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு பதவியேற்று 8 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி சிம்லாவில் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி பேரணியில் பங்கேற்கிறார். பாஜக ஆளும் அனைத்து மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் ஒன்றிய அரசின் அமைச்சர்களும் விழாவில் பங்கேற்பார்கள்’ என்றார்.