புது டெல்லி: 2021-க்கான சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில் மொத்தம் 685 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்கள் பெண்கள்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற சிவில் சர்வீஸ் முதற்கட்ட தேர்வை சுமார் 5 லட்சம் பேர் தேர்வு எழுதி இருந்தனர். அவர்களில் 9214 பேர் மட்டுமே முதன்மைத் தேர்வு எழுத தகுதி பெற்றனர். அதில் 1,824 பேர் நேர்முகத் தேர்வில் பங்கேற்றனர். ஒட்டுமொத்தமாக இந்தத் தேர்வுக்கு சுமார் 10 லட்சம் பேர் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
நேர்முகத் தேர்வு மூலம் இப்போது 685 பேர் குடிமைப் பணிகளுக்கு தகுதி பெற்றுள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது. தகுதி பெற்றவர்களில் 177 பேர் பெண்கள். இந்திய ஆட்சியர் பணி, இந்தியக் காவல் பணி உட்பட வெவ்வேறு பணிகளுக்கு இவர்கள் தேர்வாகி உள்ளனர்.
வெற்றி பெற்றவர்களில் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்கள் 73 பேர். 203 பேர் ஓபிசி பிரிவினர், 105 பேர் பட்டியலினத்தை சேர்ந்தவர்கள், 60 பேர் பட்டியலின பழங்குடியினர் மற்றும் 244 பேர் பொதுப் பிரிவை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 700-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் ஆணையம் தெரிவித்துள்ளது.
26 வயதான ஸ்ருதி ஷர்மா இந்தத் தேர்வில் முதலிடம் பிடித்துள்ளார். அங்கிதா அகர்வால் இரண்டாம் இடமும், காமினி சிங்களா மூன்றாம் இடமும் பிடித்துள்ளனர்.