Stalin visits delta and inspects drain works: கல்லணையில் இருந்து தஞ்சை உள்ளிட்ட டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில், தஞ்சை மாவட்டம் பீமனோடை வடிகால் வாய்க்காலில் ரூ.14.50 லட்சம் செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ள தூர்வாரும் பணிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தஞ்சை மாவட்டத்தில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், செவ்வாய்க்கிழமை நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொள்கிறார்.
காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட 10 டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் ரூ.80 கோடி மதிப்பில் 4964 கி.மீ நீளத்திற்கு 683 பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதன்படி தஞ்சை மாவட்டத்தில் ரூ.21 கோடி மதிப்பில் 170 தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தஞ்சை டெல்டா மாவட்டங்களில் இரண்டு நாள் பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா, வடபாதி கொக்கேரி கிராமத்தில் பீமனோடை வடிகால் நெடுகையில் 4.5 கி.மீ நீளத்திற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள தூர்வாரும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பீமனோடை வடிகாலானது வடவாறு வாய்க்காலின் வலது கரையில் 24.930 கி.மீ. பிரிந்து 15 கி.மீ வரை செல்கிறது. இது சுமார் 315 ஏக்கர் நிலங்களுக்கு பாசனம் அளிக்கிறது. பீமனோடை வடிகால் திட்டுக்களும், காட்டாமணக்கு கோரை போன்ற செடிகளும் முளைத்து தண்ணீர் செல்லும் பாதையை அடைத்த நிலையில் இருந்தது. எனவே 14.50 லட்சம் செலவில் செடிகளை அகற்றி தூர்வாரப்பட்டுள்ளது. இதன் மூலம் வடபாதி கொக்கேரி, சிக்கப்பட்டு, கருப்பமுதலியார்கோட்டை, சேனாப்பேட்டை, கீழப்பட்டு ஆகிய கிராமங்கள் பயன்பெறும்.
முன்னதாக அவர் தஞ்சை மாவட்டத்தில் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்த புகைப்படக் கண்காட்சியைப் பார்வையிட்டார். அதன் பின்னர், அப்பகுதி மக்களை சந்தித்துப் பேசினார்.
இதையும் படியுங்கள்: தூர்வாரப்படாத திருத்து வாய்க்கால்: ஸ்டாலின் கவனிப்பாரா?
ஆய்வின்போது, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்ஷேனா, தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உள்ளிட்டோர் இருந்தனர்.
ஆய்வு முடித்து வேளாங்கண்ணி புறப்பட்டுச் சென்ற தமிழக முதல்வர் ஸ்டாலின் இரண்டாவது நாளான நாளை நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.
எஸ்.இர்ஷாத் அஹமது, தஞ்சாவூர்