கவுகாத்தி: அசாமில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பாலியல் குற்றவாளி, அங்கிருந்து தப்ப முயன்ற போது போலீசார் அவரை துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். இம்மாநிலத்தில் கடந்த ஓராண்டில் போலீஸ் என்கவுன்டரில் 47 பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. அசாம் மாநிலம் கர்பி அங்லாங் மாவட்டத்தை சேர்ந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளியை போலீசார் கைது செய்தனர். அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்ததால் மருத்துவ சிகிச்சைக்காக திபு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், நேற்று முன்தினம் இரவு முதல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த குற்றவாளி மாயமானார். அதிர்ச்சியடைந்த போலீசார், அவரை மருத்துவமனை முழுவதும் தேடிபார்த்தனர். கடைசியாக மருத்துவமனையின் குளியலறையில் பதுங்கி இருந்த அவரை பிடிக்க முயன்றனர். ஆனால் குற்றம்சாட்டப்பட்டவர் அங்கிருந்து தப்ப முயன்றதால் அவரை போலீசார் சுட்டு கைது செய்தனர். இதுகுறித்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ் சோனோவால் கூறுகையில், ‘பாலியல் குற்றவாளியை உடனடியாக கைது செய்யக் கோரி பெண்கள் மற்றும் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இருந்தும் தலைமறைவாக இருந்த குற்றவாளியை நாகாலாந்தில் வைத்து கைது செய்தோம். அப்போது அவர் காவலரைத் தாக்கிவிட்டு தப்ப முயன்றார். இருந்தும், அங்கிருந்து பத்திரமாக அழைத்து வரப்பட்டு கைது செய்யப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அங்கிருந்து தப்ப முயன்றார். பலமுறை எச்சரித்தும் போலீஸ் காவலில் இருந்து தப்ப முயன்றதால், அவரது காலை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. தற்போது, அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்’ என்றார். கடந்த வாரம் இதேபோன்று கோக்ரஜாரில் போலீஸ் காவலில் இருந்து தப்பிக்க முயன்ற ஒருவரை போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தி கைது செய்தனர். முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையிலான பாஜக ஆட்சியில் கடந்த ஓராண்டில் மட்டும் குறைந்தது 47 பேர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் 116 பேர் போலீஸ் காவலில் இருந்து தப்பிச் செல்ல முயன்றபோது அல்லது சீருடையில் இருந்த போலீசாரை தாக்கிவிட்டு ஓடிய குற்றச்சாட்டின் கீழ் அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.