இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு
தமிழ்நாட்டு மக்கள் அத்தியாவசிய உணவு பொருட்களை அன்பளிப்பாக வழங்கியுள்ள
நிலையில் குறித்த உலர் உணவு பொருட்கள் அனைத்து மாவட்ட மக்களுக்கும்
பகிர்ந்தளிக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டு மக்களின் அன்பளிப்பு
மன்னார் மாவட்டத்தில் 25,000 குடும்பங்களுக்கு வழங்குவதற்காக 2
லட்சத்து 50 ஆயிரம் கிலோ அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இன்று
(30) காலை மன்னார் பிரதேச செயலகத்தில் வைத்து மன்னார் மாவட்ட
அரசாங்க அதிபர் ஸ்ரான்லி டிமெலிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த உணவுப்பொருட்கள் இந்திய உயர்ஸ்தானிகர் தலைமையில் உத்தியோகபூர்வமாக
தெரிவு செய்யப்பட்ட மக்களுக்கு வழங்கி வைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
முதற்கட்டமாக 6500 குடும்பங்களுக்கு வழங்குவதற்காக 65,000 கிலோ உணவுப் பொருட்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
உதவி பொருட்களை வழங்கி வைக்கும் நிகழ்வு
இந்த நிலையில் குறித்த பொருட்களை வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று(30) மாலை 4 மணியளவில் மன்னார் மாவட்ட செயலகத்தில் மாவட்ட
அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டிமெல் தலைமையில் இடம்பெற்றது.
இதன் போது இந்திய துணை தூதர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன் கலந்து கொண்டு
மக்களுக்கான உலர் உணவு பொதிகளை வழங்கி வைத்தார்.
குறித்த நிகழ்வில் இந்திய துணை தூதரக தலைமை அதிகாரி ராம் மகேஷ்,வன்னி மாவட்ட
பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன் போது முதல் கட்டமாக 60 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி
வைக்கப்பட்டன.
இதனை தொடர்ந்து, மாந்தை மேற்கு பிரதேச செயலகம் மற்றும் மடு பிரதேச செயலகத்திற்கு பொருட்கள் கொண்டு செல்லப்படவுள்ளன.
மேலும், நாளைய தினம் (31) நானாட்டான்
மற்றும் முசலி பிரதேச செயலகங்களுக்கு, உணவுப் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டு
பயனாளர்களுக்கு வழங்கப்பட உள்ளது.