வெஸ்ட் நைல் வைரஸ் காய்ச்சல்: தமிழகத்தில் அனைத்து மருத்துவமனைகளுக்கும் சுகாதாரத் துறை அலர்ட்

சென்னை: கொசுக்கள் மூலம் பரவும் வெஸ்ட் நைல் வைரஸ் காய்ச்சல் அறிகுறிகளுடன் எவரேனும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டால் அதுகுறித்த விவரங்களை உடனடியாகத் தெரிவிக்க வேண்டும் என்று தமிழக பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

வெஸ்ட் நைல் வைரஸ் காய்ச்சல் “க்யூலெக்ஸ்’ எனப்படும் ஒரு வகை கொசுக்கள் மூலம் பரவுகிறது. காய்ச்சல், உடல் வலி, தலைவலி, கால் வீக்கம் போன்றவை அதன் முக்கிய அறிகுறிகளாகக் கருதப்படுகின்றன.

இந்தக் கொசுக்கள் அசுத்தமான நீரில் வளரக் கூடியவை. 1937-இல் ஆப்பிரிக்க நாடுகளில் இந்த வகை பாதிப்பு முதன்முதலில் கண்டறியப்பட்டது. இந்தியாவில் முதன்முறையாக கேரளத்தில் 2011-ம் ஆண்டு இந்த பாதிப்பு கண்டறியப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, 2019-இல் ஒரு சிறுவன் கேரளத்தில் அக்காய்ச்சலுக்கு பலியானதும் சுகாதாரத் துறை தகவல்களில் பதிவாகியுள்ளது.

இந்நிலையில், தற்போது கேரளத்தில் வெஸ்ட் நைல் வைரஸ் காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. திருச்சூரில் 47 வயது நபர் ஒருவர் அதற்கு பலியானார்.

இதனைத் தொடர்ந்து, பொது சுகாதாரத் துறை சார்பில் அனைத்து மருத்துவமனைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதில், வெஸ்ட் நைல் காய்ச்சல் அறிகுறிகளுடன் எவரேனும் அனுமதிக்கப்பட்டால், அதுகுறித்த விவரங்களை உடனடியாக மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநர்களிடம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகையில், “தமிழகத்தில் இதுவரை வெஸ்ட் நைல் காய்ச்சல் பாதிப்பு பதிவாகவில்லை. அதனால், அதுகுறித்த அச்சம் தேவையில்லை. அதேவேளையில், அதற்கான அறிகுறிகள் இருந்தால் அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவமனையில் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

ரத்தப் பரிசோதனைகள் மூலம் வெஸ்ட் நைல் பாதிப்பு உள்ளதா என்பதை உறுதிப்படுத்த முடியும். இதைத் தவிர, தங்களது சுற்றுப்புறத்தில் கழிவுநீர் தேங்காமல் தூய்மையாக வைத்துக் கொள்ள பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து கழிவுநீர் தேங்காமல் தடுக்கும் பணிகளை பொது சுகாதாரத் துறை மேற்கொண்டு வருகிறது” என்று தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.