அபுதாபியில் நடைபெற்றுவரும் சர்வதேச புத்தகக் கண்காட்சியில் கலந்துகொண்ட காங்கிரஸ் மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சசி தரூர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் “இந்தியாவில் உள்ள சாதாரண மக்கள் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்று விரும்புகிறார்கள். எனவே, காங்கிரஸ் கட்சிக்குள் பெரிய சீர்திருத்தங்கள் மேற்கொள்வது அவசியம், இல்லையெனில் அடுத்த மக்களவைத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெறுவது அவ்வளவு எளிதல்ல. இந்த காலகட்டத்தில் இதுஒரு தேவையாகிவிட்டது.
நாளுக்கு நாள் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிப்பது போல, மோடி அரசின் ஆட்சியில் பெட்ரோல், உணவுப் பொருள்களின் விலையும் அதிகரித்து வருகின்றன. இந்த நேரத்தில் காங்கிரஸால் நாட்டுக்கு நிறையச் செய்ய முடியும். அதற்காக காங்கிரஸின் கட்டமைப்பில் முக்கியமான சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டால், காங்கிரஸ் திறம்பட மீண்டு வரமுடியும். மேலும், உதய்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாடு குறித்து நான் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன். தற்போது இழந்த பெருமையை மீட்டெடுக்கும் முயற்சியில் காங்கிரஸ் ஈடுபட்டிருக்கிறது. இந்த நாட்டில் உள்ள சாமான்யர்கள் விரும்புவதைப் போலவே, கட்சித் தொண்டர்களும் காங்கிரஸ் மேம்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று நம்புகிறார்கள், அதற்கான மாற்றங்கள் அவசியம்” எனக் கூறியுள்ளார்.