மதுரை: தூய்மைப்பணியாளர்கள் போராட்டத்தால் இன்று சாக்கடை உடைந்து மதுரை ஆட்சியர் அலுவலகத்தை கழிவுநீர் சூழ்ந்து தேங்கியது. அதனால், மனு அளிக்க வந்த மக்கள் சாக்கடை நீரை கடந்து செல்ல முடியாமல் அவதியடைந்தனர்.
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளில் பணியாற்றும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள், பொறியியல் பணியாளர்கள் இன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால், மதுரை மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் தூய்மைப்பணிகள் பாதிக்கப்பட்டன. இந்நிலையில் இன்று ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்த கழிவுநீர் கால்வாய் உடைந்து ஆட்சியர் அலுவலகத்தை கழிவு நீர் சூழ்ந்தது. நேற்று முன்தினம் மழை பெய்து அந்த தண்ணீரும் கழிவு நீருடன் சேர்ந்தால் குளம்போல் தேங்கி நின்றது.
இன்று திங்கட்கிழமை என்பதால் ஏராளமான பொதுமக்கள் மனு அளிக்க வந்திருந்தனர். அவர்கள் தேங்கிய கழிவு நீரை கடந்துதான் ஆட்சியருக்கு மனு அளிக்க சென்றனர். கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டதோடு துர்நாற்றமும் வீசியது. மாநகராட்சி பணியாளர்கள் போராட்டத்தில் இருந்ததால் அவர்கள் பராமரிப்பு பணியை பார்க்க வரவில்லை. அதனால், இன்று முழுவதும் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பணிபுரிந்த பணியாளர்கள், மனு அளிக்க வந்த பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.