மாஸ்கோ : எதிரிகளை அழிக்க அதீத வீரியம் கொண்ட விஷத்தை ரஷ்ய அதிபர் பயன்படுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது போர் நடத்தும் ரஷ்யா மீது, மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளன.
இருந்தும் ரஷ்ய அதிபர் புடின், உலக நாடுகளின் எந்த வார்த்தைக்கும் செவி சாய்க்காமல் சர்வாதிகாரி போல செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், எதிரிகளை அழிக்க மிக அதிக வீரியம் கொண்ட விஷத்தை ரஷ்ய அதிபர் புடின் பயன்படுத்துகிறார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ‘ஸ்ட்ரிச்னைன்’ என்ற இந்த விஷத்தை, ரஷ்ய நாட்டின் உளவு நிறுவனமான கே.ஜி.பி., பயன்படுத்துவதாக தெரிய வந்துள்ளது.
இது குறித்து, விஞ்ஞானி நீல் பிராட்பரி கூறியதாவது: மிக மிக ஆபத்தான வேதிப்பொருள் பட்டியலில் ஸ்ட்ரிச்னைன் உள்ளது. இந்த விஷம் உடலுக்குள் சென்றால், உடல் முழுதும் முறுக்கிப் போடும் அளவுக்கு உச்சகட்ட வலி ஏற்படும். எந்த மருந்தாலும் இந்த வலியை குறைக்கவோ, மரத்துப் போகவோ செய்ய முடியாது. எலும்புகளின் பிணைப்பை முறித்து உடல் நடுக்கம் ஏற்படும்.
உச்சகட்ட வேதனையை பல மணி நேரம் அனுபவித்த பிறகே மரணம் ஏற்படும். கற்பனை கூட செய்து பார்க்க முடியாத அளவுக்கு நரக வேதனையை அனுபவிக்க வேண்டியிருக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.இந்த கொடிய விஷத்தை தான் ரஷ்ய அதிபர் புடின் தன் எதிரிகளை அழிக்க பயன்படுத்துகிறார் என்ற தகவல் சமீபத்தில் வெளியாகி, உலகம் முழுதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement