கோட்டா: ரயில் டிக்கெட்டை ரத்து செய்ததற்கு பிடித்தம் செய்யப்பட்ட 35 ரூபாய் சேவை வரியை திரும்ப பெற ஐந்து ஆண்டுகளாக நடத்திய போராட்டத்தில் ராஜஸ்தான் பொறியாளர் வெற்றி பெற்றுள்ளார்.
ராஜஸ்தானின் கோட்டா மாவட்டத்தை சேர்ந்தவர் பொறியாளர் சுஜீத் சுவாமி, 30. இவர், 2017 ஜூலை 2ல், கோட்டாவில் இருந்து புதுடில்லி செல்வதற்காக, ‘கோல்டன் டெம்பிள் மெயில்’ என்ற ரயிலில் ஐ.ஆர்.சி.டி.சி., எனப்படும், இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழக இணையதளம் வாயிலாக டிக்கெட் முன்பதிவு செய்தார். அவர் இந்த முன்பதிவை 2017, ஏப்ரலில் மேற்கொண்டார். இதற்காக, 765 ரூபாய் வசூலிக்கப்பட்டது.
இதற்கிடையே, 2017 ஜூலை 1 முதல் நாடு முழுவதும் ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறைக்கு வந்தது. இந்நிலையில், சுஜீத் சுவாமி பயண திட்டத்தை கைவிட்டு, டிக்கெட்டை ரத்து செய்தார். டிக்கெட்டை ரத்து செய்ததற்கான கட்டணமாக 100 ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டு, 665 ரூபாய் திருப்பி அளிக்கப்பட்டது.
இதையடுத்து, ரத்து செய்ததற்கான கட்டணமாக 65 ரூபாய் பிடித்தம் செய்ய வேண்டிய இடத்தில் கூடுதலாக 35 ரூபாய் பிடிக்கப்பட காரணம் கேட்டு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சுஜீத் சுவாமி மனு செய்தார். ஜி.எஸ்.டி., வரி அமலுக்கு வந்திருப்பதால், சேவை வரியாக 35 ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டதாக பதில் அளிக்கப்பட்டது. ஜி.எஸ்.டி., வரி விதிப்புக்கு முன்பே தன் டிக்கெட்டை ரத்து செய்துவிட்டதாக சுஜீத் சுவாமி வாதிட்டார்.
இது தொடர்பாக ரயில்வே மற்றும் மத்திய நிதி அமைச்சகம், தகவல் அறியும் உரிமை ஆணையம் ஆகியவற்றுக்கு 50க்கும் மேற்பட்ட மனுக்களை கடந்த ஐந்து ஆண்டுகளாக அனுப்பி போராடி வருகிறார். கடந்த 2019ல் 33 ரூபாய் திருப்பி அளிக்கப்பட்டது. மீதமுள்ள 2 ரூபாய்க்காக போராட்டத்தை தொடர்ந்தார்.
ஜி.எஸ்.டி., நடைமுறைக்கு வருவதற்கு முன் டிக்கெட் முன்பதிவு செய்து ரத்து செய்த அனைவருக்கும் பிடித்தம் செய்யப்பட்ட சேவை வரியை திருப்பி அளிக்க மத்திய அரசு சமீபத்தில் உத்தரவிட்டது. இதையடுத்து 2.98 லட்சம் பயனாளர்களுக்கு தலா 35 ரூபாய் வீதம், 2.43 கோடி ரூபாய் திருப்பி அளிக்கப்பட்டு வருகிறது. இதில், சுஜீத் சுவாமிக்கு 2 ரூபாய் திரும்ப கிடைத்துள்ளது.