சென்னை: மாதவரம் தொகுதியில் அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் என சென்னை மாமன்றக் கூட்டத்திற்கு வந்து தமது கோரிக்கைகளை முன்வைத்தார் எம்எல்ஏ சுதர்சனம்.
சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் இன்று நடைபெற்ற மாமன்றக் கூட்டத்திற்கு வந்த எம்.எல்.ஏ. சுதர்சனம் பேசிகையில், “மாதவரம் தொகுதி, சென்னை மாநகராட்சியுடன் இணைந்து 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனாலும், அப்பகுதி மக்கள் அடிப்படை வசதிகளின்றி தவித்து வருகின்றனர்.
மக்கள் தொகைக்கு ஏற்ப, மாதவரம் சுற்றுவட்டாரங்களில் வளர்ச்சி இல்லை. அத்தொகுதியில் ஏராளமான குளங்கள் உள்ளன. அவற்றை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போதிய அளவில் துாய்மைப் பணியாளர்களை நியமிக்க வேண்டும். கழிவுநீர் வெளியேற்ற நடவடிக்கை எடுத்தல், விபத்துகள் ஏற்படுவதை தடுத்தல், மாதவரம் – வடபெரும்பாக்கம் பகுதிகளில் பாலம் அமைத்தல் போன்றவற்றை செய்து தர வேண்டும்.
தொகுதியில் சொத்து வரியும் அதிகமாக இருப்பதால், சீராய்வு செய்ய வேண்டும்” என்று அவர் கோரிக்கைகளை முன்வைத்தார். அந்தக் கோரிக்கையை பரிசீலிப்பதாக சென்னை மேயர் பிரியா தெரிவித்தார்.