தண்ணீரில் மூழ்கி 11-ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி சுப்பிரமணியபுரத்தில் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கேரளாவில் சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார். இவருக்கு சண்முகத்தாய் என்ற மனைவியும், தினேஷ்பாபு(20) என்ற மகனும், கிருஷ்ணபிரியா(16) என்ற மகளும் இருந்துள்ளனர். இதில் கிருஷ்ணபிரியா தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் குமாரகிரியில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக சண்முகத்தாய், தனது மகன் மற்றும் மகளுடன் சென்றுள்ளார். இதில் நேற்று காலை கிருஷ்ணப்ரியா தனது நண்பர்களுடன் அப்பகுதியில் இருக்கும் தோட்டத்து கிணற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக கிருஷ்ணப்ரியா தண்ணீரில் மூழ்கி விட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த தோழிகள் ஊரில் இருப்பவர்களிடம் தெரிவித்தனர். ஆனால் அவர்களால் கிருஷ்ண பிரியாவை மீட்க முடியவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த கங்கைகொண்டான் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கயிறு கட்டி கிருஷ்ணபிரியாவின் உடலை மீட்டனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.