பெங்களூரு : கர்நாடகாவில், பாரதிய கிஷான் யூனியன் என்ற விவசாய அமைப்பின் தலைவர் ராகேஷ் திகாயத் மீது, பாரத் ரக் ஷனா என்ற அமைப்பினர் கறுப்பு மை வீசி தாக்குதல் நடத்தினர். கர்நாடகாவின் பெங்களூரில் உள்ள காந்தி பவனில், விவசாய சங்கத்தினர் கூட்டம் நேற்று நடந்தது.
பாரதிய கிஷான் யூனியன் தலைவர் ராகேஷ் திகாயத் பேசிக் கொண்டிருந்த போது, இருக்கையில் அமர்ந்திருந்த ஒருவர் திடீரென எழுந்து, பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவாக கோஷம் எழுப்பினார். மேடையை நோக்கி ஆக்ரோஷமாக சென்று, ராகேஷ் பேசிக்கொண்டிருந்த மைக்கை பிடுங்கி தள்ளினார். அவர் மீது கறுப்பு மை வீசி தாக்கினார். அந்த நபரை, மற்ற விவசாயிகள் சரமாரியாக தாக்கினர்.
வேறு சில நபர்களும் உள்ளே புகுந்து விவசாயிகளை தாக்கினர். அந்த இடமே போர்க்களமாக மாறியது.காயமடைந்த ராகேஷ் திகாயத்தை, மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். விவசாயிகளை தாக்கியதாக கூறி, பாரத் ரக் ஷனா அமைப்பின் மாநில தலைவர் பரத் ஷெட்டி உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர்.சமீபத்தில் ஆம் ஆத்மியில் இணைந்த, மாநில விவசாய சங்க தலைவர் சந்திரசேகர் முறைகேட்டில் ஈடுபட்டது குறித்து விவசாயிகள் கூட்டத்தில் பேசியதால், அவரது ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
Advertisement