31.5.2022
04.10: உக்ரைனின் மெலிடோபோல் நகரில் கார் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததல் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். அந்த நகரம் தற்போது ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. ரஷிய படைகளை எதிர்ப்போர் இந்த சதி வேலையில் ஈடுபட்டிருக்கலாம் எனுறு ரஷிய விசாரணைக்குழு தெரிவித்துள்ளது. மெலிடோபோல் நகரை நிர்வாகம் செய்ய ரஷியாவால் நியமிக்கப்பட்ட அதிகாரி தங்கியிருந்த கட்டிடத்திற்கு அருகே இந்த கார் குண்டு வெடிப்பு நிகழ்ந்ததாக மேயர் இவான் ஃபெடோரோவ் தெரிவித்துள்ளார்.
02.50: ரஷியா, உக்ரைன் இடையேயான போர் முடிவுக்கு வர உதவுவதற்கு தயாராக இருப்பதாக துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் ரஷிய அதிபர் புதின் உடனான உரையாடலின் தெரிவித்துள்ளார். இதற்காக இஸ்தான்புல் நகரில் ரஷியா, உக்ரைன் மற்றும் ஐ.நா.சபை அதிகாரிகளை சந்தித்து பேசவும் தயார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
01.40: உக்ரைனின் டான்பாஸ் பகுதியில் உக்ரைன் ராணுவ நிலைகளை ரஷியப் படையினர் தொடர்ந்து தாக்கி வருகின்றனர். இது குறித்து செய்தி சேகரிக்க சென்ற பிரான்ஸ் ஊடகவியலாளர் ஒருவர் ரஷியா நடத்திய பீரங்கித் தாக்குதலுக்கு பலியானதாக உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
12.30: ரஷியாவை நேரடியாக தாக்கும் ஏவுகணைகளை உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்காது என்று அந்நாட்டு அதிபர் ஜோ பைடன்
தெரிவித்துள்ளார். பைடன் அரசு ரஷியாவிற்கு எதிராக போரிடுவதற்கு உக்ரைன் நாட்டிற்கு மேம்படுத்தப்பட்ட நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை அனுப்பத் தயாராகி வருகிறது என்ற செய்திகள் வெளியான நிலையில் பைடன் இதை மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
21.10: இந்த ஆண்டுக்கான யூரோவிஷன் பாடல் போட்டியில் வெற்றி பெற்ற உக்ரைன் போட்டியாளர்கள், வெற்றி கோப்பையை 900,000 டாலருக்கு விற்றதாக அறிவித்தனர். இந்த பணத்தை தங்கள் நாட்டு ராணுவத்திற்கு ட்ரோன்கள் வாங்க பயன்படுத்தப் போவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
30.5.2022
20:30: உக்ரைனுக்கு டென்மார்க்கில் இருந்து குறிவைத்து கப்பல்களைத் தாக்கும் ஹார்ப்பூன் ஏவுகணைகள் வந்துள்ளன. அமெரிக்காவில் இருந்தும் ஹோவிட்சர் ஏவுதல் ஆயுதங்கள் கிடைத்துள்ள. ரஷியாவின் படையெடுப்புக்கு எதிரான போரில் இது உக்ரைனுக்கு பலம் தருவதாக இருக்கும் என உக்ரைன் பாதுகாப்பு மந்திரி ஒலெக்சி ரெஸ்நிக்கோவ் தெரிவித்துள்ளார்.
17:30: பிரான்ஸ் நாட்டின் புதிய வெளியுறவுத்துறை மந்திரி கேத்தரின் கொலோனா உக்ரைனுக்கு வந்துள்ளார். புச்சா நகரில் உள்ள தேவாலயத்திற்கு வந்த அவர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, போரில் பொதுமக்கள் கொல்லப்படுவதற்கு கண்டனம் தெரிவித்த அவர், புச்சாவில் பொதுமக்கள் கொல்லப்பட்டது போன்று இனி ஒருபோதும் நடக்கக்கூடாது என்றார்.
16:00: உக்ரைனுடனான மோதலில் ரஷியா தனது ராணுவத்தில் நடுத்தர மற்றும் இளைய அதிகாரிகளை அதிக அளவில் இழந்திருப்பதாக தெரிகிறது, இது எதிர்காலத்தில் ராணுவத்தின் செயல்திறன் பலவீனமாவதற்கு வாய்ப்பாகி விடும் என்று பிரிட்டனின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இளம் அதிகாரிகளின் இழப்பு, அதன் ராணுவ கட்டளை மற்றும் கட்டுப்பாட்டை நவீனமயமாக்குவதில் சிக்கலை ஏற்படுத்தும் என்றும் பிரிட்டனின் பாதுகாப்பு அமைச்சகம் கூறி உள்ளது.
11:50: பிரான்ஸ் வெளியுறவுத்துறை மந்திரி கேத்தரின் கொலோனா உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்திக்க உள்ளார். கீவில் இந்த சந்திப்பு நடைபெற உள்ளது. அப்போது, உக்ரைனுக்கு பிரான்ஸ் கூடுதல் ஆதரவை வழங்குவது குறித்து அறிவிப்பார் என்று பிரான்ஸ் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உக்ரைனுக்கு ஆதரவளிப்பதில் பிரான்ஸ் போதுமான அளவு செயல்படவில்லை என்ற விமர்சனங்களுக்கு மத்தியில் கொலோனாவின் உக்ரைன் பயணம் அமைந்துள்ளது. இதேபோல் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களும் இன்று கூடி உக்ரைனுக்கான ஆதரவை மீண்டும் தெரிவிக்க உள்ளனர்.
09.28: உக்ரைன் மீதான ரஷிய தாக்குதல் 3 மாதங்களுக்கு மேல் நடைபெற்று வரும் நிலையில், உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் உதவி வருகின்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரான்ஸ், ஜெர்மனி நாடுகளுக்கு ரஷிய அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்தார். இந்நிலையில் ரஷியாவால் அச்சுறுத்தல் ஏற்பட்டால், அதை எதிர்கொள்ளும் வகையில் தனது நாட்டு ராணுவத்தை நவீனப்படுத்துவதற்கு ரூ.8 லட்சம் கோடியை ஜெர்மனி ஒதுக்கியுள்ளது.
04.20: ரஷிய போரினால் அதிகம் பாதிக்கப்பட்ட கார்கீவ் பகுதிக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேரடியாக சென்று ஆய்வு செய்துள்ளார். கார்கீவ் நகரத்தை சுற்றி வளைக்க முயன்று தோல்வியுற்ற பிறகு ரஷிய படைகள் சீவிரோடோனெட்ஸ்க் நகரம் மீது தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
02.40: ரஷியாவின் படையெடுப்பு தொடங்கியதில் இருந்து நகரத்தின் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள தவறியதற்காக கார்கிவ் பாதுகாப்பு சேவை பிரிவு தலைவரை நீக்கி உள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். சீவிரோடோனெட்ஸ் பகுதியில் உள்ள அனைத்து முக்கியமான உள்கட்டமைப்புகளும் ரஷிய படையெடுப்பால் அழிக்கப்பட்டு விட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இடைவிடாத பீரங்கித் தாக்குதல்களை நடத்தி 90 சதவீத கட்டிடங்களை ரஷிய படையினர் சேதப்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
01.30: கிழக்கு உக்ரைன் பகுதியில் ரஷிய மற்றும் உக்ரைன் படைகள் தீவிர போரில் ஈடுபட்டுள்ளன. உக்ரைன் படைகளை எதிர்கொள்ளும் வகையில் ரஷிய வீரர்கள் தீவிர வெடிகுண்டு தாக்குதல்களை நடத்தி அந்த பகுதியை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
12.10: ரஷிய அதிபர் புதின், செர்பிய அதிபர் அலெக்சாண்டர் வுசிக்வுடன் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினார். ரஷியா, செர்பியாவுக்கு இயற்கை எரிவாயுவைத் தொடர்ந்து வழங்கும் என்றும் இரு நாடுகளும் தங்கள் கூட்டணியை வலுப்படுத்தும் என்றும் இரு தலைவர்களும் அப்போது ஒப்புக்கொண்டதாக ரஷிய அதிபரின் கிரெம்ளின் மாளிகை தகவல்கள் தெரிவித்துள்ளன.