லக்னோ : லஞ்சம் வாங்கிக் கொண்டு ரத்தத்துக்கு பதிலாக, ‘குளூகோஸ்’சில் சிவப்பு நிற திரவத்தை கலந்து நோயாளிக்கு அளித்த பெண் சுகாதாரப் பணியாளர், ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டார்.உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.
இங்கு, மஹோபா மாவட்டத்தில் உள்ள பந்த்ரா கிராமத்தைச் சேர்ந்தவர் ராம்குமாரி, 65. இவர் தன் மகன் ஜுகல் என்பவருடன் வசித்து வருகிறார். ஜுகலுக்கு உடல்நிலை சரியில்லாததால், அவரை மஹோபா மாவட்ட அரசு மருத்துவ மனைக்கு ராம்குமாரி அழைத்து சென்றார். அவரை பரிசோதித்த டாக்டர்கள், ரத்தம் ஏற்ற பரிந்துரைத்தனர்.இதையடுத்து மகனை மருத்துவமனையில் அனுமதித்தார்.
ரத்தம் ஏற்பாடு செய்ய, 5,000 ரூபாய் பணம் தருமாறு சுகாதாரப் பணியாளர் கேட்டுள்ளார். பண வசதி இல்லாததால், ராம்குமாரி தன் நகையை விற்று 5,000 ரூபாய் அளித்துள்ளார். பணத்தை பெற்றுக் கொண்ட சுகாதாரப் பணியாளர், குளூகோஸ் பாட்டிலில் சிவப்பு நிற திரவத்தை ஊற்றி ரத்தம் எனக் கூறி அதை நோயாளி ஜுகலுக்கு ஏற்றி உள்ளார்.
நாளடைவில் அவரது உடல்நிலை மோசமடைந்தது. அவரை உடனடியாக பெரிய மருத்துவமனைக்கு மாற்ற டாக்டர்கள் அறிவுறுத்தினர். அப்போது, சுகாதாரப் பணியாளர் செய்த மோசடி வெளிச்சத்துக்கு வந்தது. அவர் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாக தலைமை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் மிஸ்ரா தெரிவித்தார்.
Advertisement