கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் 4000 நிதி உதவி: திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

புதுடெல்லி:  கொரோனா தொற்றினால் பெற்ேறாரை இழந்த குழந்தைகளுக்கு மாதந்தோறும் ₹4 ஆயிரம் வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பிஎம் கேர்ஸ் திட்டத்தின் கீழ், குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி டெல்லியில் காணொலி வாயிலாக நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு, கொரோனா தொற்றினால் பெற்றோர்களில் ஒருவரையோ, இரண்டு பேரையுமோ அல்லது பாதுகாவலரையோ இழந்த குழந்தைகளுக்கு மாதந்தோறும் ₹4 ஆயிரம் வழங்கும்  திட்டத்தை தொடங்கி வைத்தார். ₹4000 பெறும் பயனாளிகளுக்கு வங்கி புத்தகம், பிரதமரின் ஜன் ஆரோக்ய யோஜனா திட்டத்தின் கீழ் காப்பீடு அட்டை உள்ளிட்டவற்றையும் பிரதமர் வழங்கினார். நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பேசியதாவது:கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் பராமரிப்பு செலவுக்காக மாதந்தோறும் ₹4 ஆயிரம் வழங்கப்படும். அவர்களுக்கு 23 வயதாகும்போது மொத்தமாக ₹10 லட்சம் வழங்கப்படும். அவர்களது மருத்துவ வசதிக்காக ஆயுஷ்மான் சுகாதார அட்டை வழங்கப்படும்.  தொற்றுநோய் காலத்தில் நாடு அதன் வலிமையை நம்பி இருந்தது. உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளுக்கு மருந்துகள் மற்றும் கொரோனா தடுப்பு மருந்தை வழங்கினோம். மிகப்பெரிய நாடாக இருந்தபோதிலும் ஒவ்வொரு குடிமகனுக்கும் கொரோனா தடுப்பூசியை வழங்கினோம். நாடு முழுவதும் 200 கோடி டோஸ் தடுப்பு மருந்து வழங்கப்பட்டுள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் இதற்கு முன் கற்பனை செய்து பார்க்க முடியாத உயரங்களை இந்தியா எட்டியுள்ளது. தற்போது இந்தியாவின் பெருமை உலகம் முழுவதும் அதிகரித்துள்ளது. சர்வதேச அமைப்புக்களில் இந்தியாவின் சக்தி அதிகரித்துள்ளது. இந்தியாவின் இந்த பயணத்தை இளைஞர் சக்தி முன்னெடுத்து செல்வது மகிழ்ச்சி அளிக்கின்றது. இவ்வாறு பிரதமர் தெரிவித்தார். 8 ஆண்டு ஆட்சி நிறைவுபிரதமர் மோடி தலைமையிலான பாஜ அரசு அமைந்து 8 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. 2014ல் மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் பாஜ முதல் முறையாக ஆட்சிப் பொறுப்பேற்று 5 ஆண்டுகள் ஆட்சி செய்தது. பின்னர் 2019ல் மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று, தொடர்ந்து 2வது முறையாக ஆட்சி அமைத்தது. இதில் 3 ஆண்டுகளை நேற்றுடன் நிறைவு செய்துள்ளது. இது தொடர்பாக குழந்தைகளுக்கான பிஎம் கேர்ஸ் நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ‘‘இந்த நாடு லஞ்சம், ஆயிரக்கணக்கான கோடி ஊழல், தங்களது உறவினர்களுக்கு உயர்பதவியை வழங்குவது, நாடு முழுவதும் தீவிரவாதத்தை பரப்புவது மற்றும் பிராந்திய இன வேறுபாடு உள்ளிட்ட 2014ம் ஆண்டுக்கு முன் சிக்கிய தீய சுழற்சியில் இருந்து விடுபட்டு வெளியே வந்துள்ளது. அரசின் 8 ஆண்டுகாலம் ஏழை மக்களின் நலனுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. 8 ஆண்டு கால ஆட்சி நிறைவடையும்போது நாட்டின் நம்பிக்கையும், நாட்டு மக்கள் தங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உள்ளது.’’ என்றார்.இன்று சிம்லா பயணம் பிரதமர் மோடி இன்று சிம்லா செல்கிறார். அங்கு நடைபெறும் கரீப் கல்யாண் சம்மேளனம் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். தொடர்ந்து ஒன்றிய அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் பயனடைந்த பயனாளிகளுடன் அவர் கலந்துரையாடுகின்றார். மேலும், பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் 11வது தவணையாக ₹21 ஆயிரம் கோடியை பிரதமர் மோடி விடுவிக்கிறார். இதன் மூலம் நாடு முழுவதும் 12 கோடி விவசாயிகள் பலன் அடைவர். இத்திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ₹6,000 நிதி உதவித் தொகை 3 தவணையாக வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியின் போது, மாநில முதல்வர்கள், ஒன்றிய அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் அவரவர் மாவட்டங்களில் இருந்தபடி பிரதமருடன் கலந்துரையாடுகின்றனர். இதற்காக சிம்லாவில் பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.