கொல்கத்தா: மேற்குவங்கத்தின் ஜல்பைகுரி தேயிலை தோட்ட பகுதிக்கு கடந்த வெள்ளிக்கிழமை ஒரு தாய் யானை, உயிரிழந்த குட்டியை தும்பிக்கையில் சுமந்தபடி வந்தது. அந்த தாய் யானையை சுமார் 30 காட்டு யானைகள் பின்தொடர்ந்தன.
கண்களில் நீர்வழிந்தபடி உயிரிழந்த குட்டியை தும்பிக்கையில் தூக்கிக் கொண்டு ஒவ்வொரு தேயிலை தோட்டமாக தாய் யானை சுற்றித் திரிந்தது. கடந்த இரு நாட்களாக சுமார் 7 கி.மீ. தொலைவுக்கு அங்கும், இங்கும் பிளிறியபடி ஓடியது.
மாநில வனத் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து தாயிடம் இருந்து உயிரிழந்த குட்டியை பிரிக்க முயற்சி செய்தனர். ஆனால் தாய் யானை, குட்டியை விட்டு விலக மறுத்துவிட்டது. அதோடு 30 யானைகளும் சுற்றித் திரிந்ததால் வனத்துறை அலுவலர்களால் உயிரிழந்த குட்டியை மீட்க முடியவில்லை. இரு நாட்களாக தேயிலை தோட்டங்களில் குட்டியை தூக்கியபடி சுற்றித் திரிந்த தாய் யானை காட்டுக்குள் சென்றது.
வனத்துறை அதிகாரிகள் கூறும் போது, “மனிதர்களை போன்று யானைகளும் தங்கள் குட்டிகள் மீது அதிகம் பாசம் கொண்டிருக்கின்றன. குட்டி யானை எப்படி உயிரிழந்தது என்பது தெரியவில்லை. ஆனால் தாய் யானையின் தவிப்பு எங்களை கண்ணீர்மல்க செய்துவிட்டது” என்று தெரிவித்தனர்.
உயிரிழந்த குட்டியை, தாய் யானை தும்பிக்கையில் சுமந்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.