DMK oppose governor’s request to accept National education policy to Ponmudi: தேசிய கல்விக்கொள்கையை ஏற்றுக் கொள்ளுங்கள், அமைச்சர் பொன்முடியிடம் நான் வைக்கும் கோரிக்கை இதுதான் என ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதற்கு திமுகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
தேசிய கல்விக்கொள்கைக்கு ஆதரவாக பல்வேறு இடங்களில் ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்துக்களை தெரிவித்து வருகிறார். புதிய தேசிய கல்விக்கொள்கை வந்தால் நாடு வேகமாக வளர்ச்சி பாதைக்கு செல்லும். கல்வி கொள்கைகளை அரசியல் ரீதியாக பார்க்க கூடாது. நம்மளுடைய கலாச்சாரம், வரலாறு, பாரம்பரியம் ஆகியவை பல்வேறு அரசாங்கங்களால் ஏற்கனவே மறைக்கப்பட்டது. இந்த மறைக்கப்பட்ட வரலாற்றை மீட்டு எடுக்கும் வகையில் புதிய தேசிய கல்விக்கொள்கை அமையும், என்று ஆளுநர் தேசிய கல்விக் கொள்கைக்கு ஆதரவாக பேசிவருகிறார்.
இந்த நிலையில் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் 13வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, செயலாளர் கார்த்திகேயன், ஐஐடி இயக்குனர் காமகோடி, பல்கலைக் கழக துணைவேந்தர் பார்த்தசாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி மீண்டும் தேசிய கல்விக்கொள்கைக்கு ஆதரவாக பேசினார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் உள்ள பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாட்டை நடத்தினேன். அதில், பலவிதமான யோசனைகளை மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்ததை பார்த்தேன். மகிழ்ச்சியாக இருந்தது. நம்மிடம் தற்போதுள்ள கல்வி முறையைப் பற்றி நாம் ஒரு மீள்பார்வை செய்ய வேண்டும். இதுநாள் வரை நாம் தேசத்தைப் பார்த்த பார்வை சற்று சரியாக இல்லை என்று சொல்ல வேண்டும். ஒரு பிராந்திய, புவியியல் அமைப்பு சார்ந்த பிரதேச உள்ளுணர்வோடு கல்விக் கொள்கையை அணுகி இருக்கிறோம்.
இந்தியாவில் 70 சதவீத பெண்களே உயர் கல்வி படிப்பவர்களாக உள்ளனர். பெண்கள் அதிகளவில் உயர்கல்வி பயில, சமுதாய முன்னெடுப்புகள், மாற்றங்களே காரணம். பெண் கல்வியே நாட்டின் சொத்து. அவர்களே நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்கின்றனர்.
புதிய கல்விக் கொள்கை தொலைநோக்கு, மாற்றத்திற்கான கல்வியை நோக்கமாகக் கொண்டது. இது மாணவ, மாணவியருக்கு கூடுதல் ஆற்றலை, அறிவை வழங்கும். நமது கல்வியில் புதிய மாற்றங்களை முன்னெடுக்கும்வகையில் புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. கல்வியில் மாற்றம் கொண்டு வருவதே இந்தியாவின் எதிர்காலத்திற்கு உதவியாக இருக்கும். இதன் மூலம் படிப்பை பாதியில் கைவிட்டாலும், மீண்டும் தொடர புதிய கல்விக் கொள்கையில் வாய்ப்பு உள்ளது.
மற்றவர்கள் சொல்வதைக் கேட்டு புதிய கல்விக் கொள்கை தவிர்க்கப்படுகிறது. முதலில் அந்த கொள்கை என்னவென்று அரசியல் தலைவர்கள் படிக்க வேண்டும். இங்கு யாரும் அதை முழுமையாக படிக்கவில்லை. அதை முழுமையாக படித்து தெரிந்து கொள்ள வேண்டும். புதிய கல்விக் கொள்கையை முழுமையாக அறிந்து, அதிலுள்ள சிறப்புகளை தெரிந்துகொள்ள வேண்டும். அதன்பின்பே அதில் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும், என்று ஆளுநர் பேசினார்.
பின்னர் அமைச்சர் பொன்முடியிடம், தயவு செய்து தேசிய கல்விக்கொள்கையை ஏற்றுக்கொள்ளுங்கள்.. அமைச்சர் பொன்முடியிடம் நான் வைக்கும் கோரிக்கை இதுதான் என்று மேடையிலேயே ஆளுநர் கூறினார்.
இந்த நிலையில், தேசிய கல்விக்கொள்கைக்கு ஆதரவாக ஆளுநர் பேசியதற்கு எதிராக திமுகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்: டெல்டாவில் ஸ்டாலின்: நாகை, திருவாரூரில் செவ்வாய்க்கிழமை ஆய்வு
திமுக எம்எல்ஏ டிஆர்பி ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், “மாண்புமிகு ஆளுநரிடமிருந்து இதுபோன்ற வார்த்தைகளைப் பார்க்க வருத்தமாக இருக்கிறது! அவர் உத்வேகம் பெறுவது போல் தோன்றும் பின்தங்கிய இந்தி பேசும் பகுதியில் உள்ளவர்களை விட, தமிழ்நாட்டில் திறமையான அதிகாரிகள் மற்றும் நிர்வாகிகள் உள்ளனர் என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும். தமிழகம் வரலாற்று ரீதியாக தேசத்திற்கு ஆட்சியை கற்றுக் கொடுத்ததை அவர் நினைவில் கொள்ள வேண்டும்,” என பதிவிட்டுள்ளார்.
திமுக செய்தி தொடர்பு இணை செயலாளர் ராஜீவ் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழ்நாடு ஆளுநர் மேதகு ரவி அவர்கள் தன் பதவியை ராஜினமா செய்து விட்டு மக்கள் மன்றத்தில் தேர்தலில் நின்று வென்று தன் நெடுநாள் ஆசையான புதிய கல்வி கொள்கையினை நிறைவேற்றட்டும்! அதுவும் தன் சொந்த மாநிலத்தில்! ஆளுநர்களுக்கு கொள்கையினை கொண்டு வர அரசியல் அமைப்பு சட்டத்தில் அதிகாரம் இல்லை!” என பதிவிட்டுள்ளார்.