புதுடெல்லி: சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடை சட்டத்தின் கீழ் டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயினை (57) அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று கைது செய்தனர்.
கொல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நிறுவனத்தில் ஹவாலா முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.
இது தொடர்பாக கடந்த 2018-ம் ஆண்டு டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயினிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இதைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினர் மற்றும் நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.4.81 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கினர். இந்நிலையில் அவரை கைது செய்துள்ளனர். கைது நடவடிக்கைக்கு டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கண்டனம் தெரிவித்துள்ளார்.