தனக்கு அமைச்சர் பொறுப்பு அளிக்க தீர்மானம் நிறைவேற்றி, தலைமைக்கு இனி யாரும் தர்மசங்கடத்தை உருவாக்கிட வேண்டாமென தொண்டர்களுக்கு சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருச்சி, திண்டுக்கல், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெற்ற திமுக செயல்வீரர்கள் கூட்டங்களில் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பொறுப்பு கொடுக்கப்பட வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு கட்சி தலைமையகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின.
இதனை சுட்டிக்காட்டி திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “எனக்கு அமைச்சர் பொறுப்பு வேண்டி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதை அறிந்தேன். என் தொடர் பணிகள் மீதும், முன்னெடுப்புகள் மீதும் நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கும், அன்பிற்கும் நான் நன்றிக்குரியவனாக இருப்பேன்.
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினராக தொகுதி மக்களின் தேவைகளைக் கேட்டறிந்து, அதற்குரிய தீர்வுகளுக்கான மக்கள் பணியையும், இளைஞரணி அணிச் செயலாளராகவும் கட்சிப் பணிகளையும் இயன்றவரை சிறப்பாக ஆற்றி வருகிறேன்.
கட்சியை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க அடுத்தகட்ட திட்டமிடல்களுடன் பாசறைக் கூட்டங்கள் நடத்துவது, நலதிட்டப் பணிகளில் ஈடுபடுவது என பல பயணங்களுக்குத் தயாராகி வருகிறேன்.
இந்தச் சூழலில் என்மீதுள்ள அன்பின் காரணமாக, எனக்கு அமைச்சர் பொறுப்பு அளிக்க தீர்மானம் நிறைவேற்றி, தலைமைக்கு இனி யாரும் தர்மசங்கடத்தை உருவாக்கிட வேண்டாமென உங்கள் அனைவரையும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
எந்தச் சூழலில் எந்த முடிவை எடுக்க வேண்டும் என்பதை கழகமும் தலைமையும் நன்கறியும் என்பதை கழக உடன்பிறப்புகள் நாமும் அனைவருமே அறிவோம்.
எனவே, பெரியார், அண்ணா, கலைஞர், பேராசிரியரின் வழியில் வந்த நம் கழகத் தலைவர் வழங்கும் கட்டளையின் வழியில் நின்று கழகத்தை வளர்க்க உழைத்திடுவோம். மக்கள் பணியாற்றுவோம். கட்சிக்கும் அரசுக்கும் மகத்தான புகழை சேர்த்திடுவோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
கட்சித் தீர்மானங்கள் ஒருபுறம் இருக்க, சில ஊடகங்களில் தமிழக அமைச்சரவையில் விரைவில் மாற்றம் செய்யப்பட உள்ளது. அதில் 3 சீனியர்களுக்கு மாற்றாக உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட மூன்று இளைஞர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
இத்தகைய சூழலில் தான் உதயநிதி ஸ்டாலின் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.