கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 – திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

மத்தியில் பாஜக ஆட்சி அமைந்து 8 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதனிடையே பிரதமர் நேற்று பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்தார். அதன் ஒரு பகுதியாக, கொரோனா தொற்று பாதிப்பால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பி.எம் கேர்ஸ் குழந்தைகள் திட்டம் மூலம் மாதம் ரூ.4000 வழங்கும் திட்டத்தைப் பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் ஸ்மிருதி இராணி மற்றும் பிற அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

பிரதமர் மோடி, “கொரோனா பெருந்தொற்றால் தங்கள் பெற்றோர் மற்றும் அன்புக்குரியவர்களை இழந்த குழந்தைகளுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

பி.எம் கேர்ஸ்

தற்போதைய சூழலில் இந்த குழந்தைகள் நாள்தோறும் சந்திக்கும் பிரச்னைகளை வார்த்தைகளால் சொல்ல இயலாது. நான் பிரதமராக உங்களுடன் பேச வில்லை, உங்கள் குடும்ப உறுப்பினராகப் பேசுகிறேன். பி.எம் கேர்ஸ் திட்டம் என்பது தாய் தந்தை இருவரையும் இழந்த குழந்தைகள் எதிர்கொள்ளும் பிரச்னைகளைக் குறைப்பதற்கான ஒரு சிறிய முயற்சி. நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் உங்களுடன் உணர்வுப்பூர்வமாகத் தொடர்பில் உள்ளனர் என்பதற்கான பிரதிபலிப்பு.

உயர்கல்வி அல்லது தொழில் சார்ந்த படிப்புகளைப் படிக்க விரும்பும் குழந்தைகளுக்கு பி.எம் கேர்ஸ் திட்டம் உதவி செய்யும். குழந்தைகளின் அன்றாட தேவைகள் உள்ளிட்ட அனைத்து செலவுகளுக்கும் பி.எம் கேர்ஸ் மூலம் மாதம்தோறும் ரூ. 4 ஆயிரம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் அவர்கள் 23 வயதை எட்டும்பொது ரூ. 10 லட்சம் கிடைக்கும். தவிர ஆயுஷ்மான் அட்டை மூலம் உடல் நலம் மற்றும் உளவியல் தொடர்பான ஆலோசனைகள் அளிக்கப்படும்.

பிரதமர் மோடி

ஏற்கனவே ஆயுஷ்மான் மூலம் குழந்தைகளுக்கு ரூ. 5 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. பெற்றோரின் அன்புக்கு ஈடு செய்வதாக எதுவும் இருக்க முடியாது. இந்த இக்கட்டான தருணத்தில் குழந்தைகளாகிய உங்களுடன் இந்தியா இருக்கிறது. பி.எம் கேர்ஸ் திட்டம் மூலம் குழந்தைகளுக்கான பொறுப்பை நிறைவேற்ற நாடு முயற்சி செய்கிறது. வாழ்க்கை விரக்தியின் விளிம்பிலிருந்தாலும் தன்னம்பிக்கை இருந்தால் நிச்சயம் ஒளிக்கதிர் தெரியும். இதற்கு நம்முடைய நாடே மிகச் சிறந்த உதாரணம். பெரியவர்களும் ஆசிரியர்களும் சொல்வதைக் கேட்டு குழந்தைகள் நடந்து கொள்ள வேண்டும். இக்கட்டான தருணங்களில் நல்ல நூல்கள் நமக்கு நம்பகமான நண்பனாக இருக்கும்” எனப் பேசினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.