மும்பை சொகுசுக் கப்பலில் நடைபெற்ற கேளிக்கை விருந்தின்போது போதைப்பொருள் பயன்படுத்தியதாக பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன்
ஆர்யன் கான்
உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். மும்பை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி
சமீர் வான்கடே
தலைமையிலான அதிகாரிகள் கப்பலில் அதிரடி சோதனை நடத்தி இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டனர்.
இதனிடையே, வழக்கில் தனக்கு ஜாமீன் கோரி ஆர்யன் கான் தரப்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம், அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து, 21 நாட்களுக்கு பின்னர், அவர் சிறையில் இருந்து வெளியே வந்தார்.
அதேசமயம், ஆர்யன் கானின் வழக்கை மும்பை போதைப்பொருள் தடுப்பு பிரிவில் இருந்து டெல்லி சிறப்பு விசாரணை குழுவுக்கு மாற்றி மத்திய போதைப்பொருள் தடுப்பு முகமை உத்தரவிட்டது. இந்த நிலையில், ஷாருக்கான் மகன் ஆர்யன் கானிடம் போதைப் பொருள் இல்லை என்று போதைப்பொருள் தடுப்பு அமைப்பின் சிறப்பு விசாரணை குழு கடந்த சில நாட்களுக்கு முன்னர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், 14 பேர் குற்றவாளிகளாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் பெயர் அதில் இடம்பெறவில்லை. இந்த நிலையில்,
ஷாருக் கான்
மகன் ஆர்யன் கானை கைது செய்த
போதைப் பொருள் தடுப்பு பிரிவு
அதிகாரி சமீர் வான்கடே சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பகுப்பாய்வு மற்றும் இடர்பாடு மேலாண்மை இயக்குனரகத்தின் மும்பை பிரிவில் பணியாற்றி வந்த போதைப்பொருள் தடுப்பு அமைப்பின் மும்பை பிரிவு முன்னாள் அதிகாரி சமீர் வான்கடே வரிசேவை இயக்குனரகத்தின் சென்னை பிரிவிற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக, ஆர்யன் கான் வழக்கில் இருந்து மும்பை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சமீர் வான்கடே கடந்த ஆண்டு நவம்பரில் விடுவிக்கப்பட்டு பகுப்பாய்வு மற்றும் இடர்பாடு மேலாண்மை இயக்குனரகத்தின் மும்பை பிரிவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். சொகுசு கப்பல் போதைப் பொருள் வழக்கில் சமீர் வான்கடே உரிய நடைமுறைகளை பின்பற்றவில்லை எனவும் விசாரணையை சரிவர நடத்தவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, போதைப்பொருள் வழக்கில் சரிவர விசாரணை நடத்தாத சமீர் வான்கடே மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி நிதித்துறை அமைச்சகத்திற்கு மத்திய அரசு பரிந்துரை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.