உறவினர்களால் கடத்தி செல்லப்பட்ட லெஸ்பியன் தோழியை மீட்டு தரக்கேட்டு இளம்பெண் புகார்

திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் எர்ணாகுளத்தை அடுத்த ஆலுவா பகுதியை சேர்ந்தவர் ஆதிலா நஸ்ரின்.
ஆதிலா நஸ்ரினின் பெற்றோர் சவுதி அரேபியாவில் வசித்து வந்தனர். இதனால் ஆதிலா நஸ்ரினும் அங்கேயே தங்கியிருந்து பள்ளியில் படித்து வந்தார்.
அப்போது இவருடன் கேரளாவை சேர்ந்த மாணவி ஒருவரும் ஒன்றாக படித்தார். இதில் இருவரும் நெருங்கிய தோழிகள் ஆனார்கள். இந்த நெருக்கம் அதிகமாகி அவர்களுக்கு இடையே லெஸ்பியன் உறவு ஏற்பட்டது.
தோழிகளின் உறவை தெரிந்து கொண்ட பெற்றோர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கேரளா திரும்பினர். இதையடுத்து ஆதிலா நஸ்ரினும் கேரளா திரும்பினார்.
இங்கு வந்ததும் லெஸ்பியன் தோழியை சந்தித்தார். பின்னர் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி தாமரை சேரி பகுதியில் தனியாக வீடு எடுத்து தங்கி இருந்தனர்.
ஆதிலா நஸ்ரினையும், அவரது தோழியையும் காணாது தவித்த உறவினர்கள் அவர்களை பல இடங்களிலும் தேடினர். இதில் இருவரும் தாமரை சேரியில் தங்கியிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அங்கு சென்ற உறவினர்கள், ஆதிலா நஸ்ரினுடன் தங்கியிருந்த அவரது தோழியை தங்களுடன் வருமாறு அழைத்தனர். அவர் மறுத்தார். என்றாலும் உறவினர்கள் அவரை வலுகட்டாயமாக அங்கிருந்து கடத்தி சென்றனர்.
தோழியை அழைத்து சென்ற பின்னர், ஆதிலா நஸ்ரினால். அவரை சந்திக்க முடியவில்லை. மேலும் தொடர்பு கொள்ளவும் இயலவில்லை. இதனால் அவர் போலீசில் புகார் செய்தார். அந்த புகார் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறப்படுகிறது.
இதையடுத்து ஆதிலா நஸ்ரின், கோர்ட்டில் வழக்கு தொடரப்போவதாக கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறும்போது, என் தோழியை என்னிடம் இருந்து அழைத்து செல்லும்போது கோர்ட்டில் ஆஜர்படுத்தப் போவதாகவே உறவினர்கள் கூறினார்கள்.ஆனால் அவர்கள் கூறியபடி கோர்ட்டில் ஆஜர்படுத்தவில்லை.
எனவே என்தோழியை என்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என கோர்ட்டில் வழக்கு தொடரப்போகிறேன், என்றார்.
இது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.