புதுடெல்லி: நாடாளுமன்ற மாநிலங்களவை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் 18 வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கர்நாடகாவில் இருந்து அமைச்சர் நிர்மலா சீதாராமனும் மகாராஷ்டிராவில் இருந்து அமைச்சர் பியூஷ் கோயலும் மீண்டும் போட்டியிடுகின்றனர்.
நாட்டின் 15 மாநிலங்களில் 57 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது. இந்தப் பதவிகளுக்கு வரும் ஜூன் 10-ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று நிறைவடைய உள்ளது.
இந்நிலையில் மாநிலங்களவை தேர்தலுக்கான 18 வேட்பாளர்கள் கொண்ட 2 பட்டியலை பாஜக நேற்று முன்தினம் வெளியிட்டது.
இதன்படி கர்நாடகாவில் இருந்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கன்னட நடிகர் ஜக்கேஷ் ஆகியோர் போட்டியிடுகின்றனர். மகாராஷ்டிராவில் இருந்து தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்ட 3 பேர் போட்டியிடுகின்றனர்.
இதுதவிர உ.பி.யில் இருந்து 6 பேரும் பிஹாரில் இருந்து இருவரும் ஹரியாணா, உத்தராகண்ட், ராஜஸ்தான், ம.பி., ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் இருந்து தலா ஒருவரும் போட்டியிடுகின்றனர்.
மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி, ஜார்க்கண்டில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரது எம்.பி. பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில் அவரது பெயர் பட்டியலில் இல்லை.
ஐக்கிய ஜனதா தளம் சார்பில் மத்திய உருக்குத் துறை அமைச்சராக இருக்கும் ஆர்.சி.பி.சிங், பிஹாரில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரது பதவிக்காலமும் விரைவில் முடிவடைய உள்ளது. இந்நிலையில் பிஹாரில் இருந்து ஐக்கிய ஜனதா தளம் சார்பில் வெல்லக்கூடிய ஒரே இடத்துக்கான வேட்பாளராக கட்சியின் ஜார்க்கண்ட் மாநிலத் தலைவர் கிரு மகதோ அறிவிக்கப்பட்டுள்ளார். முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான ஆர்.சி.பி.சிங்குக்கு பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் மீண்டும் வாய்ப்பு வழங்கவில்லை.
இந்நிலையில் முக்தார் அப்பாஸ் நக்வி, ஆர்.சி.பி.சிங் ஆகிய இருவரும் இத்தேர்தலில் போட்டியிடாவிட்டால் அவர்கள் இருவரும் அமைச்சர் பதவியை இழக்க நேரிடும். இதனால் மத்திய அமைச்சரவையில் பிரதமர் மோடி சிறிய மாற்றம் மேற்கொள்ள நேரிடும்.
முன்னாள் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரின் மாநிலங்களவை எம்.பி. பதவிக் காலமும் விரைவில் முடியவடைய உள்ள நிலையில், மகாராஷ்டிராவில் அவர் மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்படவில்லை.
பாஜக பொதுச் செயலாளர் துஷ்யந்த் கவுதம், மாநிலங்களவை தலைமை கொறடா சிவ பிரதாப் சுக்லா, தேசிய செய்தித் தொடர் பாளர் சையது ஜாபர் இஸ்லாம், மூத்த தலைவர்கள் ஓ.பி.மாத்தூர், வினய் சஹஸ்ரபுத்தே ஆகியோருக்கும் பாஜக மீண்டும் வாய்ப்பு வழங்கவில்லை.
உ.பி.யில் கோரக்பூர் நகர்ப்புற தொகுதி எம்எல்ஏவாக 4 முறை பதவி வகித்த ராதா மோகன் தாஸ் அகர்வாலின் பெயர் பாஜக பட்டியலில் உள்ளது. இவர், முதல்வர் யோகி போட்டியிடுவதற்காக கடந்த தேர்தலில் தனது தொகுதியை விட்டுக் கொடுத்தவர் ஆவார்.