சென்னை:
தமிழக அரசு பெட்ரோல்-டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி பாரதிய ஜனதா கட்சியினர் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் இன்று கோட்டை நோக்கி பேரணி செல்ல திட்டமிட்டு எழும்பூரில் திரண்டனர்.
எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகில் கூடிய பா.ஜனதாவினர் தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களையும் எழுப்பினர். அவர்கள் கோட்டை நோக்கி தடையை மீறி பேரணியாக செல்ல முடியாத வகையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் திரண்டு அங்கிருந்து கோட்டை நோக்கி செல்வதற்கு பாரதிய ஜனதா கட்சியினர் திட்டமிட்டிருந்த போதிலும் தலைமை செயலகம் அருகில் பாரதிய ஜனதா கட்சியினர் சென்று விடக்கூடாது என்பதில் போலீசார் இன்று மிகுந்த கவனத்துடன் செயல்பட்டனர். தலைமை செயலகத்தை சுற்றியுள்ள சாலைகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது.
தீவுத்திடலில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும், நேப்பியர் பாலம் பகுதியிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை மற்றும் பாரிமுனை, ஐகோர்ட்டு அருகில் இருந்து கோட்டையை நோக்கி வரும் சாலைகளிலும் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டு இருந்தது. தலைமை செயலகம் எதிரில் உள்ள பூங்கா பகுதியிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.