டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்றுவருகிறது. டெல்லியின் முதலமைச்சராக அரவிந்த் கெஜ்ரிவால் பதவி வகித்துவருகிறார். டெல்லியின் சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயினை பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறை கைதுசெய்திருப்பது டெல்லி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கொல்கத்தாவைச் சேர்ந்த நிறுவனத்தின் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தொடர்புடைய வழக்கில், சத்யேந்திர ஜெயின் கைதுசெய்யப்பட்டிருப்பதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. இதைத் தொடர்ந்து, சத்யேந்திர ஜெயினை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என பாஜக, காங்கிரஸ் கட்சியினர் வலியுறுத்திவருகின்றனர். சத்யேந்திர ஜெயின் இமாச்சலப் பிரதேச தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், தோல்வி பயத்திலேயே மத்திய அரசு அவரைக் கைதுசெய்துள்ளதாக டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த நிலையில், இது தொடர்பாக, டெல்லி பாஜக தலைவர் ஆதேஷ் குப்தா, “அரவிந்த் கெஜ்ரிவால் தனது கட்சித் தலைவர்களுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு எப்போதும் வாய்மூடியே இருந்தார். பஞ்சாப்பில் ஆம் ஆத்மி அமைச்சர் ஒருவர் கைதுசெய்யப்பட்டு பதவி நீக்கம் செய்யப்பட்ட சில நாள்களுக்குப் பிறகு அமலாக்கத்துறையால் ஜெயின் கைதுசெய்யப்பட்டுள்ளார். அரவிந்த் கெஜ்ரிவால் இது தொடர்பாக பேச வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள்” என்றார்.
இது தொடர்பாக, டெல்லியின் காங்கிரஸ் தலைவர் அனில் குமார், `”ஜெயின் இதற்கு முன்னதாகவே கைதுசெய்யப்பட்டிருக்க வேண்டும். கெஜ்ரிவால் அவரைப் பல ஆண்டுகளாகப் பாதுகாத்துவருகிறார்” என்றார். மேலும் இது குறித்து, டெல்லி எம்.பி-யும், டெல்லி பாஜக முன்னாள் தலைவருமான மனோஜ் திவாரி, `ஜெயினைக் கைதுசெய்வதற்கு முன்பு அமலாக்க இயக்குநரகம் இவரைப் பற்றிய ஆதாரங்களைச் சேகரித்துள்ளது. இப்போது அரவிந்த் கெஜ்ரிவால் தார்மிகப் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும்” என்றார்.