'விக்ரம்' அதிக கட்டணம் : கண்டிப்பாரா கமல்ஹாசன்?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில், கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் மற்றும் பலர் நடித்துள்ள 'விக்ரம்' படம் ஜுன் 3ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்திற்காக அதிகாலை 4 மணி சிறப்பு காட்சி, 7 மணி காட்சி, 8 மணி காட்சிகள் நடைபெற உள்ளது. அதிகாலை 4 மணி காட்சிகளுக்கான டிக்கெட் கட்டணம் 500 ரூபாய், 7 மணி, 8 மணி காட்சிகளுக்கான டிக்கெட் கட்டணம் 300 ரூபாய். கடந்த வருடங்களில் அதிகாலை சிறப்பு காட்சிகளின் டிக்கெட் கட்டணங்கள் கூட அரசு நிர்ணயித்த கட்டணங்களாக இருந்தன.

ஆனால், 'பீஸ்ட், வலிமை' படங்களுக்கான டிக்கெட் கட்டணங்களாக 500, 1000 என அநியாயமாக வசூலித்தார்கள். அரசு தரப்பிலும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. ரசிகர் மன்றக் காட்சிகள் என்ற போர்வையில் சில ரசிகர்களுக்கு மட்டும் டிக்கெட்டுகளைக் கொடுத்துவிட்டு, தியேட்டர்காரர்களே அநியாய விலைக்கு டிக்கெட்டுகளை விற்கிறார்கள்.

சினிமாவிலிருந்து அரசியலுக்குச் சென்று பல சந்தர்ப்பங்களில் தன்னை நியாயவானாகக் காட்டிக் கொள்ளும் கமல்ஹாசன் இந்த அநியாய கட்டணக் கொள்ளைக்கு கண்டனம் தெரிவிப்பாரா என கேள்வி எழுப்புகிறார்கள். திமுகவை பல சந்தர்ப்பங்களில் விமர்சித்த கமல்ஹாசன் இந்தப் படத்தை உதயநிதி ஸ்டாலினின் நிறுவத்திற்கு விற்ற போதே கமல்ஹாசன் மீது விமர்சனம் எழுந்தது. இந்நிலையில் இந்த அநியாய கட்டணங்களைப் பற்றி அவர் எங்கே வாய் திறக்கப் போகிறார் என்றும் கோலிவுட்டில் சிரிக்கிறார்கள்.

சினிமா ஹீரோக்கள் சினிமாவில்தான் அநீதிக்கு எதிராகப் பொங்கி எழுவார்கள். அவர்களின் படங்கள் வெளியாகி 500, 1000, 2000 என டிக்கெட் விற்கும் போது காணாமல் போய்விடுவார்கள் என்பது கமல்ஹாசன் விஷயத்திலும் நடக்கத்தான் போகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.