பெங்களூரு:
எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே முக்கிய பதவியில் இருப்பது ஏன் என்று நான் கேள்வி கேட்டேன். எனது இந்த கேள்விக்கு அந்த அமைப்பினரோ அல்லது பா.ஜனதாவினரோ பதில் கூறவில்லை.
எனது கேள்விக்கு பதிலளிக்க முடியாத பா.ஜனதாவினர் தனிப்பட்ட முறையில் என்னை தாக்கி பேசுகிறார்கள். எனது சிறிய கேள்விக்கு கூட பதிலளிக்க முடியாத ஆர்.எஸ்.எஸ். ஒரு பலவீனமான அமைப்பா?. அந்த அமைப்பு குறித்து தெரிந்து கொள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்திற்கு வரும்படி என்னை அழைக்கிறார்கள்.
அங்கு சென்று 40 சதவீத கமிஷன் பெறுவது எப்படி, விலை கொடுத்து எம்.எல்.ஏ.க்களை வாங்குவது என்பது அறிந்து கொள்ள வேண்டுமா?. ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்திற்கு சென்றால் என்ன நிலை ஏற்படும் என்பதற்கு பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீலே சாட்சி. அவருக்கு கலாசாரம் உள்ளிட்ட மாண்புகள் என்ன என்றே தெரியவில்லை. அந்த அமைப்பில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டும் முக்கிய பதவியில் இருப்பது ஏன் என்ற கேள்விக்கு பதிலளிக்குமாறு நான் மீண்டும் கேட்கிறேன்.
இவ்வாறு சித்தராமையா குறிப்பிட்டுள்ளார்.