புதுடெல்லி: அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளையும் ஒரே இணையத்தில் பெறும் வகையிலான புதிய இணையதளத்தை மத்திய அரசு விரைவில் அறிமுகம் செய்கிறது. இத்தகவலை பொருளாதார விவகாரத் துறை செயலர் அஜய் சேத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் 75-வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் வகையில் ஜூன் 6-ம் தேதி 5 ரூபாய் நாணயம் வெளியிடப்பட உள்ளது. இந்த நாணயம் அனைவருக்கும் சென்றடையும் வகையில் அதிக எண்ணிக்கையில் தயாரிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஜூன் 9-ம் தேதி கடன் வசூல் தீர்ப்பாயங்கள் குறித்து மாநாடு நடைபெற உள்ளது. இதில் அதன் செயல்பாடு, திட்டங்கள் அதில் எட்டப்பட்ட வளர்ச்சி குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
சுயசார்பு நிலையை எட்ட மத்திய அரசு நிறுவனங்களின் பங்களிப்பை விளக்கும் கண்காட்சி ஜூன் 10-ம் தேதி முதல் 12-ம் தேதிவரை மகாத்மா மந்திரில் நடைபெற உள்ளது. இதை மத்திய நிதி அமைச்சர் தொடங்கி வைக்கிறார். குஜராத் மாநில முதல்வர் பூபேந்திர படேல் இதில் பங்கேற்கிறார்.
நாட்டின் 75-வது சுதந்திர தின விழாவைக் கொண்டாடும் வகையில் மத்திய பொதுத் துறை நிறுவனங்கள் பல்வேறு பகுதிகளில் 75 ஆயிரம் மரக்கன்றுகளை நடுவதற்கு திட்டமிடப் பட்டுள்ளது. மேலும், 15 பொதுத்துறை நிறுவனங்கள் 27 டவுன் ஷிப்களை மினி ஸ்மார்ட் நகரங்களாக அடுத்த ஆண்டு ஆகஸ்ட்15-க்குள் மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.