சென்னை: பெட்ரோல்,டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி தமிழக பாஜக சார்பில் கட்சியின் தலைவர் அண்ணாமலை தலைமையில், தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெட்ரோல் டீசல் விலையைப் பொருத்தவரை கடந்த மே 21-ம் தேதி, நாடு முழுவதும் பெட்ரோல் மீதான கலால் வரியை பெட்ரோல் விலையை லிட்டருக்கு 8 ரூபாயும், டீசல் விலையை லிட்டருக்கு 6 ரூபாயும் குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து மாநில அரசுகளும் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும் பல்வேறு தரப்பிலும் வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில் தமிழக அரசு 72 மணி நேரத்திற்குள் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கவில்லை என்றால், தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஏற்கெனவே அறிவித்திருந்தார். இதன்படி இன்று தமிழக பாஜக சார்பில், தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்காக எழும்பூரில் ராஜாரத்தினம் மைதானம் அருகிலிருந்து பேரணியாக சென்று தலைமைச் செயலகத்தை முற்றுகையிடுவதற்காக பாஜக தொண்டர்கள் திரண்டிருந்தனர். பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்திய வாசகங்கள் அடங்கிய பதாகைகளை தொண்டர்கள் கையில் ஏந்தியவாறு, இந்த பேரணியில் பங்கேற்றனர்.
பாஜவினரின் பேரணியையொட்டி இந்தப் பகுதிகளில் ஏராளமான போலீஸார், தடுப்பு வேலிகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தடுப்பு வேலிகளைத் தாண்டி பாஜகவினர் சென்றால், அவர்களை கைது செய்வதற்கும் காவல்துறையினர் தயார் நிலையில் உள்ளனர்.