பஞ்சாப் மாநிலம், ஜலந்தரில் உள்ள ஷிவ் நகர்ப் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளியாகப் பணிபுரிந்து வருபவர் சுனில். இவருக்கு ஏற்கெனவே இரண்டு பெண்களுடன் திருமணமாகி, கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தனியாக வசித்து வந்திருக்கிறார். இந்த நிலையில், சுனில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மூன்றாவதாக ஒரு பெண்ணைத் திருமணம் செய்திருக்கிறார். இவர்களுக்கு இரண்டு வயதில் குழந்தை ஒன்றும் இருக்கிறது. இந்த நிலையில், நேற்றிரவு சுனிலுக்கும் அவர் மனைவிக்குமிடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த சுனிலின் மனைவி தன் பெற்றோருக்கு போன்செய்து வீட்டுக்கு வரவழைத்திருக்கிறார்.
குடும்ப சண்டையை சமாதானம்செய்ய சுனில் மனைவியின் பெற்றோரும் அவர் இல்லத்துக்கு வந்திருக்கின்றனர். சமானதாப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட அவர்களை கடிந்துகொண்ட சுனில், வீட்டிலிருந்து கோபமாக வெளியேறியிருக்கிறார். பின்னர் சிறிது நேரத்தில் துப்பாக்கியுடன் வீட்டுக்குத் திரும்பிய சுனில், தன் மனைவி, அவர் தாய்-தந்தை மூவரையும் சரமாரியாகச் சுட்டிருக்கிறார். அதில், மூவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அதையடுத்து, அக்கம்பக்கத்தினர் சுனிலைப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். அவரைக் கைதுசெய்த போலீஸார், அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.