சென்னை: “அண்டை மாநிலமான கர்நாடகாவில் குட்கா உள்ளிட்ட பொருட்களுக்கு தடை இல்லாததால், அங்கிருந்து இதுபோன்ற போதைப்பொருட்கள் தமிழகத்திற்கு கடத்தப்படுகிறது” என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு புகையிலை இல்லா கல்வி நிறுவனங்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா இன்று (மே 31) சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்றது. இந்த விழாவில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: “இதில் சவாலான விஷயம் என்னவென்றால், பக்கத்து மாநிலமான கர்நாடகாவில் பான்பராக், குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்க தடை இல்லை. இதனால் வியாபாரிகள் எளிதாக கர்நாடகாவிற்குச் சென்று வியாபாரம் செய்வதற்காக அங்கிருந்து அவற்றை வாங்கி வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை நேரடியாக எடுத்து வந்தால், காவல் துறையினர் சுங்கச்சாவடிகளில் பிடித்து விடுவர் என்ற காரணத்தால், பெங்களூருவில் இருந்து வருகின்ற காய்கறி வண்டிகளில் மறைத்துவைத்து தமிழகத்திற்கு கடத்தி வருகின்றனர்.
இதை தினந்தோறும் கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்பது தொடர்ந்து வருகிறது. இந்த விஷயத்தில் காவல் துறையினரும் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு பறிமுதல் செய்து வருகின்றனர்” என்று அவர் கூறினார்.