மதுரையில் மாடி வழியே வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள் 12 சவரன் தங்கநககைகள் மற்றும் 1.5 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.
மதுரை மேலஅனுப்பானடி பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவர் நூல் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பாலசுப்பிரமணியனின் குடும்பத்தினர் சென்னைக்கு சென்றிருந்த நிலையில், பாலசுப்பிரமணியன் வீட்டின் கீழ் தளத்தில் நேற்றிரவு தூங்கி கொண்டிருந்தார்.
அப்போது, வீட்டின் மேல்பக்கமாக வீட்டினுள் புகுந்த மர்மநபர்கள் வீட்டின் இரும்பு டிராவில் வைக்கப்பட்டிருந்த 12 சவரன் தங்க நகைகள் மற்றும் 1.5 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதையடுத்து காலையில் எழுந்து பார்த்தபோது டிராவில் இருந்த நகை மற்றும் பணம் திருடுபோனதை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.
அதனைத் தொடர்ந்து இச்சம்பவம் குறித்து தெப்பக்குளம் காவல்துறையில் பாலசுப்பிரமணியன் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வீட்டில் இருந்த தடயங்கள் சேகரித்து 5 லட்ச ரூபாய் மதிப்பிலான நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM