இந்திய அரசு கங்கையை சுத்தப்படுத்தி மாசுகளை அகற்றும் பெரும் திட்டமான
நமாமி கங்கை
அல்லது தூய்மை கங்கை திட்டத்தை அறிவித்தது. ரூ.20,000 கோடி செலவில் இத்திட்டத்தினை செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது 100 சதவீதம் மத்திய அரசின் திட்டம் ஆகும்.
இந்த நிலையில், கங்கை அல்லது தூய்மை கங்கை திட்டத்துக்காக பிரதமர் மோடியின் பரிசுப் பொருட்களை ஏலம் விட்டத்தில் ரூ.22.5 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, 2019 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் அந்த பரிசுப் பொருட்களை ஏலம் விட்ட நவீன கலைக்கான தேசிய காட்சியகம் (NGMA) தெரிவித்துள்ளது.
அதில், “பிரதமர் மோடிக்கு பரிசாக அளிக்கப்பட்ட மொத்தம் 5,925 நினைவுச் சின்னங்கள், ஜனவரி-பிப்ரவரி 2019, செப்டம்பர்-அக்டோபர் 2019 மற்றும் செப்டம்பர்-அக்டோபர் 2021 ஆகிய மூன்று கட்டங்களாக ஏலத்தில் விடப்பட்டன. இவை பிரதமர் மோடிக்கு இந்தியர்கள் வழங்கிய பரிசுகள் மட்டுமே. வெளிநாட்டு பிரமுகர்களிடமிருந்து பெறப்பட்டவை அல்ல.” என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கப்பட்டுள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு கடந்த 20ஆம் தேதி அளிக்கப்பட்டுள்ள அந்த பதிலில், “4,682 நினைவுச்சின்னங்கள் வெற்றிகரமாக ஏலம் விடப்பட்டன. அதே நேரத்தில் 1,243 நினைவுச்சின்னங்கள் ஏலம் போகவில்லை. இது மொத்த சதவிகிதத்தில் 20.97 சதவீதமாகும். முதல் ஏலத்தில் 1,805 பொருட்கள் ஏலம் விடப்பட்டன. அதில் 240 பொருட்கள் ஏலம் போகவில்லை. இரண்டாவது ஏலத்தில் 2,772 பொருட்கள் ஏலம் விடப்பட்டன. அதில் 612 பொருட்கள் ஏலம் போகவில்லை. மூன்றாவது ஏலத்தில் 1,348 பொருட்கள் ஏலம் விடப்பட்டன. அதில் 391 பொருட்கள் ஏலம் போகவில்லை.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், மூன்று ஏலங்களிலும் திரட்டப்பட்ட தொகைகளின் விவரங்கள் முறையே முதல் மற்றும் இரண்டாவது ஏலங்களில் தலா ரூ.3.1 கோடி மற்றும் 3.6 கோடி ஆகும். மூன்றாவது சுற்று ஏலத்தில் ஈட்டப்பட்ட வருவாய் ரூ.15.8 என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் நடத்தப்பட்ட மூன்றாவது ஏலத்தில், டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீராங்கனை லோவ்லினா போர்கோஹைன் பயன்படுத்திய கையுறைகள் மற்றும் நீரஜ் சோப்ரா பயன்படுத்திய ஈட்டி போன்ற பிரதமர் மோடிக்கு பரிசாக வழங்கப்பட்ட உபகரணங்கள் ஏலம் விடப்பட்டன. இதுவரை ஏலம் விடப்பட்ட அனைத்துப் பொருட்களிலும் ஒலிம்பிக் வீரர்களின் கையெழுத்து போடப்பட்ட உபகரணங்களே அதிக விலைக்கு ஏலம் போனதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “மூன்று ஏலங்களில் இருந்து பெறப்பட்ட மொத்த விற்பனை வருமானம் நமாமி கங்கை அல்லது தூய்மை கங்கை திட்டத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டது.” என்றும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கப்பட்டுள்ளது.