புதுடில்லி: ஆன்லைன் வாயிலாக பொருட்கள் விற்கும் சிறு வணிகர்களை ஊக்குவிக்கும் வகையில், ஜி.எஸ்.டி பதிவில் இருந்து அவர்களுக்கு விலக்கு அளிக்க மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
தற்போது ஆன்லைனில் பொருட்களை விற்கும் அனைத்து சிறிய விற்பனையாளர்களும், ஜி.எஸ்.டி.,யின் கீழ் பதிவு செய்வது கட்டாயமாக உள்ளது. அதேநேரம், கடைகள் மூலம் விற்கும் சிறு வணிகர்கள், ஆண்டுக்கு ரூ.40 லட்சத்துக்கு மேல் விற்றுமுதல் இருந்தால் மட்டுமே ஜி.எஸ்.டி பதிவு கட்டாயம் என உள்ளது.
சிறிய அளவில் ஆன்லைனில் பொருட்களை விற்கும் வணிகர்கள், அதிகளவில் வாடிக்கையாளர்களை சென்றடையும் வகையில் புதிய அறிவிப்பு இருக்குமெனவும், இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் இடையே ஆலோசனை நடைபெற்று வருகிறது. ஜி.எஸ்.டி., கவுன்சிலின் சட்டக்குழு ஆய்வுக்கு பின் விலக்கு தொடர்பாக முடிவு எடுக்கப்படுமென தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதுதவிர, அடுத்த மாதம் கூடவுள்ள ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில், 5 % வரி விதிப்பை நீக்கிவிட்டு, சில அத்தியாவசிய பொருட்களுக்கு 3 சதவீதம் வரிவிதிப்பை அமல்படுத்தவும், மீதமுள்ளவற்றை 8 சதவீத வரி விதிப்பு பட்டியலுக்கு கொண்டு செல்ல பரிசீலிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் உணவு பொருட்கள் அல்லாத சிலவற்றை 3 சதவீத பட்டியலுக்கு கொண்டு செல்வதன் மூலம், விலக்கு என்பதை முழுவதும் நீக்க முடிவு செய்துள்ளது..
ஜி.எஸ்.டி வரி விதிப்பு பட்டியலை நான்கில் இருந்து மூன்றாக மாற்ற அரசு முடிவெடுத்துள்ளதாகவும், 12 சதவீதத்திற்கும், 18 சதவீதத்திற்கும் இடையே புதிதாக 15 சதவீதம் அறிமுகம் செய்யவும், 5 சதவீத வரி, 6 அல்லது 7 சதவீதமாக இருக்கலாம். அதிகபட்சம் 4 விதமான விகிதாச்சார பட்டியலுக்கு மேல் இருக்காதென தெரிகிறது.
தற்போது 5 %, 12 %, 18 % மற்றும் 28 % என 4 விகிதாசாரங்களில் ஜி.எஸ்.டி வரி விதிக்கப்படுகிறது. 480 பொருட்கள் 18 % வரிவிதிப்பின் கீழ் வருகின்றன. மொத்த ஜி.எஸ்.டி வசூலில் 70 சதவீதம் இவற்றில் மூலமே கிடைக்கிறது. பிராண்டு இல்லாத, பேக் செய்யப்படாத உணவு பொருட்களுக்கு ஜி.எஸ்.டி.,யில் இருந்து விலக்கு உள்ளது. கைப்பைகள், பெர்பியூம், சாக்லேட்டுகள், தோல்பொருட்கள் உள்ளிட்ட 143 பொருட்களுக்கான வரிவிதிப்பை உயர்த்துவது குறித்து மாநிலங்களின் கருத்துகளை கேட்டுள்ளது. மேலும், கிரிப்டோ கரன்சி மீதான 28 சதவீத ஜி.எஸ்.டி வரிவிதிப்பு குறித்தும், கவுன்சில் கூட்டத்தில் ஆலோசிக்கப்படுமென கூறப்பட்டுள்ளது.